

மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாகவும், நீட் விலக்கு மசோதா தொடர்பாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
வங்கக் கடலில் தொடர்ந்து உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய தமிழக அரசின் சார்பில், மத்திய அரசிடம் ரூ.2,629.29 கோடி நிவாரணம் கோரப்பட்டுள்ளது. இதில் ரூ.549.63 கோடியை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அரசின் உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் இந்த வாரம் ஆய்வு செய்தனர்.
மேலும், ஆய்வுக்குப் பிறகு மத்தியக் குழு உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலினைக் கடந்த 24ஆம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பில் மழை பாதிப்பு தொடர்பான சேத விவரங்களை ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்தார் என்றும், நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது அளிப்பது தொடர்பாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக கடந்த செம்டம்பர் மாதம் தமிகத்துக்கு நீட் விலக்கு அளிப்பதற்கான, மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.