கோயிலுக்கு தானமாக தரப்பட்ட சொத்துகளை உரிய நோக்கத்துக்கு பயன்படுத்தாதது தெய்வத்துக்கு செய்யும் பாவம்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கருத்து

கோயிலுக்கு தானமாக தரப்பட்ட சொத்துகளை உரிய நோக்கத்துக்கு பயன்படுத்தாதது தெய்வத்துக்கு செய்யும் பாவம்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கருத்து
Updated on
1 min read

கோயிலுக்கு தானமாக தரப்பட்டசொத்துகளை உரிய நோக்கத்துக்காக பயன்படுத்தாமல் இருப்பது தெய்வத்துக்கு செய்யும் பாவம் என உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை மாகாளியம்மன் கோயிலின் நிலத்தை 1960-ல் குத்தகைக்கு எடுத்து தரன் என்பவர் வியாபாரம் செய்து வந்தார். அந்த இடத்துக்கான வாடகையை கோயில் நிர்வாகம் கடந்த 2016-ம்ஆண்டு ரூ.17,200 ஆக உயர்த்தியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிஎஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு வழக்கு விசாரணை நடந்தது.

அப்போது, மனுதாரர் இதுவரை ரூ.1.44 லட்சம் வாடகை பாக்கிவைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி கூறியதாவது:

1960-ல் வழங்கப்பட்ட குத்தகை 5 ஆண்டுகளில் முடிந்துவிட்ட நிலையில், தற்போது மனுதாரரை ஆக்கிரமிப்பாளராகத்தான் கருத முடியும். அவரது கோரிக்கையை ஏற்க முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

கோயில் நிர்வாகம் அவரிடம் 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம்.

இந்த வழக்கு மட்டுமின்றி அறநிலையத் துறை தொடர்புடைய பல்வேறு வழக்குகளிலும், கோயில் சொத்துகளின் வாடகை முறையாகவசூலிக்கப்படுவது இல்லை. அதிகாரிகளும், அறங்காவலர்களும் கைகோர்த்துக்கொண்டு சட்டவிரோத ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

கோயில் மற்றும் பக்தர்களின்நலனுக்காக செலவிடப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் பல கொடையாளர்கள் தங்கள்சொத்துகள், சம்பாத்தியத்தை வழிபாட்டுத் தலங்களுக்கு தானமாக எழுதி வைத்துள்ளனர். அவற்றை உரிய நோக்கத்துக்காக பயன்படுத்தாமல் இருப்பது தெய்வத்துக்கு செய்யும் பாவம். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in