Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 03:07 AM

கலைஞர் உணவகம் என்ற பெயரில் அம்மா உணவகம் திட்டத்தை இருட்டடிப்பு செய்வதா? - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

கலைஞர் உணவகம் என்ற பெயரில் அம்மா உணவகம் திட்டம்இருட்டடிப்பு செய்யப்பட உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் நபர்களும், பணி நிமித்தமாக வரும் மக்களும் பயன்பெறும் வகையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2013-ல் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன.

பின்னர் பிற மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது 700 அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் செயல்படுகின்றன. மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டதுடன், பேரிடர் காலங்களில் இலவசமாக வும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் 500 கலைஞர் உணவகம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் பேசியுள்ளார். இது அம்மா உணவகம் பெயரை இருட்டடிப்பு செய்யும் வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக அரசு புதிதாக தீட்டப்படும் திட்டங்களுக்குக் கலைஞர் பெயரை வைப்பதில் அதிமுகவுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், நடைமுறையில் இருக்கும் திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது விநோதமாக உள்ளது. எனவே, இதில் முதல்வர் தலையிட்டு, புதிதாக திறக்கப்படும் உணவகங்களையும் அம்மா உணவகம் என்றபெயரிலேயே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x