

சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலகத்தில், வணிகவரி இணை ஆணையர்களின் பணிகுறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வணிகவரித் துறையில் சார்நிலையில் உள்ள 1,000 பணியிடங்களின் பணிநிலையை தரம் உயர்த்த கொள்கை அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. துறையில் தற்போது 12 நிர்வாகக் கோட்டங்கள் இயங்கி வருகின்றன. வணிகவரித் துறையை மறுகட்டமைப்பு செய்யும் ஓர் அங்கமாக 7 புதிய வணிகவரி நிர்வாகக் கோட்டங்கள் உருவாக்கவும், 6 புதிய நுண்ணறிவுக் கோட்டங்கள் உருவாக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் வரை இழப்பீட்டு தொகையுடன் சேர்த்து ரூ.56,295 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 26 சதவீதமும், 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 சதவீதமும் அதிகமாகும்.
கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நுண்ணறிவுப் பிரிவு சுற்றும் படை அலுவலர்களால் 1,74,199 வாகனங்கள் மற்றும் 2,21,543 மின் வழிச்சீட்டுகள் தணிக்கை செய்யப்பட்டு, 3,256 குற்றங்கள் கண்டறியப்பட்டன. அதன்மீது வரி மற்றும் அபராதத் தொகையாக ரூ. 17.64 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வரி ஏய்ப்பைத் தடுக்க மாநிலம் முழுவதும் இருந்த 50 சுற்றும் படை குழுக்கள், தற்போது 100 சுற்றும்படை குழுக்களாக உயர்த்தப்பட உள்ளன. மேலும் 100 வாகனங்களும் வழங்கப்பட உள்ளன.
நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ரூ.25.99 கோடி அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டது. சிறு வணிகர்கள் நல வாரியத்தில் சேருவதற்கான கட்டண விலக்கு, அடுத்த ஆண்டுமார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்து, மரணம் அடைந்த இரு வணிகர்களின் குடும்பத்துக்கு குடும்ப நல உதவித் திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையைஅமைச்சர் மூர்த்தி வழங்கினார். கூட்டத்தில், வணிகவரித் துறை செயலர் பா.ஜோதி நிர்மலா சாமி, வணிகவரி ஆணையர் மு.அ.சித்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.