Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 03:07 AM

சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வகையில் ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி கோயில்களில் ‘வைணவம் ’ பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை: இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு

திருச்சி

சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஆகியவற்றில் ‘வைணவம்’ பயிற்சிக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இறைவனை வழிபாடு செய்பவர்கள் அனைவரும் இறைவனுக்கு சடங்குகள், பூஜைகள் செய்ய சாதி வேறுபாடின்றி தகுதியான மற்றும் தேவையான பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்ககடந்த திமுக ஆட்சியில், மதுரை,பழநி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கும், சென்னை, ரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கும் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இவை செயல்படவில்லை.

இதனிடையே, தமிழக அரசின்2021-22-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரங்கம் ரங்கநாதர் கோயிலின் சார்பில் `வைணவம்’ (பாஞ்சராத்ர ஆகமம்), திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் `வைணவம்’ (வைகானசம்) பயிற்சிக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை அறிவிப்புகள் அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பயிற்சியில் சேருபவர்கள் இந்துக்களாகவும், 1.1.2022 அன்று 14 வயதுக்கு மேல் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றுஇருக்க வேண்டும். இந்து வைணவகோட்பாடுகளைக் கடைபிடிப்பவராக இருக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு சீருடை, உணவு, தங்குமிடம் வசதிகளுடன், பயிற்சி காலத்தில் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த பயிற்சியில் 40 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கடந்த முறை இந்த பயிற்சி ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில் வளாகத்தில் நடத்தப்பட்டது. தற்போது அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் யாத்ரி நிவாஸ் தங்குமிடத்தில் தற்காலிகமாக பயிற்சி மையம்செயல்படவுள்ளது. இதற்கு இரு ஆசிரியர்கள் நியமிக்கப்படஉள்ளனர்.

இதற்கான விண்ணப்பத்தை ரங்கம் கோயில் இணையதளத்தில் இருந்து (www.srirangam.org) பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து டிச.24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடைபெறும் பயிற்சிக்கான விண்ணப்பத்தை அறநிலையத் துறை இணையதளத்தில் இருந்து (hrce.tn.gov.in)பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து,டிச.26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சாதி வேறுபாடின்றி அர்ச்சகர் நியமனத் திட்டத்தின்கீழ் இந்துசமய அறநிலையத் துறை சார்பில்கடந்த ஆக.14 அன்று 56 அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அவர்களில் 22 பேர் தமிழக அரசு 2007-ம் ஆண்டு நடத்திய பயிற்சி நிலையங்களில் பயிற்சிப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x