

பாமகவுடன் கூட்டணி குறித்து கொங்குநாடு ஜனநாயக கட்சி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கொங்குநாடு ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது:
அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற கொள்கையோடு உருவானது கொங்குநாடு ஜனநாயக கட்சி. பாமகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் உள்ளவர்கள் வரலாம் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதனால், பாமக தலைவர் ஜி.கே.மணியுடன் கூட்டணி தொடர்பாக எங்கள் கட்சி நிர்வாகிகள் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அடுத்த வாரத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. அதில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச குழு அமைக்கப்படும். அந்தக் குழு, பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும். மேற்கு, வட மாவட்டங்களில் 20 தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளோம். கூட்டணி அமைந்தாலும் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம். இவ்வாறு ஜி.கே.நாகராஜ் தெரிவித்தார்.