

கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த நவக்கரை அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயில் மோதி தாய் யானை, இரண்டு குட்டி யானைகள் என மூன்று யானைகள் உயிரிழந்தன.
கோவையில் இருந்து கேரளா மாநிலத்துக்குச் செல்ல, பாலக்காடு மாவட்டம் வழியாக ரயில் தண்டவாள வழித்தடம் செல்கிறது. இந்த வழித்தடம் வழியாக தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில்கள் கேரள மாநிலத்துக்குச் சென்று வருகின்றன.
இந்நிலையில், பாலக்காடு சாலை, மதுக்கரையை அடுத்த நவக்கரை அருகேயுள்ள இடத்தில், சிறிது தூரத்தில் உள்ள ரயில் தண்டவாளப் பகுதியில் ஒரு பெரிய யானை, 2 குட்டி யானைகள் என மொத்தம் மூன்று யானைகள் உயிரிழந்து கிடந்ததை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இன்று( 26-ம் தேதி) இரவு 9 மணிக்கு பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து உடனடியாக மாவட்ட வனத்துறையினருக்கும், மாவட்ட காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
3 யானைகள் உயிரிழப்பு
மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அதில், 25 வயதுடைய ஒரு தாய் யானை தண்டவாளத்திலும், மற்ற இரு குட்டி யானைகள் தண்டவாளத்துக்கு அருகேயும் உயிரிழந்த நிலையில் கிடந்தன. உயிரிழந்த யானைகளின் உடலில் ரத்த காயங்கள் இருந்தன. கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வழித்தடத்தில் இரண்டு தண்டவாளங்கள் செல்கின்றன. ஒரு தண்டவாளம் கோவையிலிருந்து பாலக்காட்டுக்கு செல்வதற்கும், மற்றொரு தண்டவாளம் பாலக்காட்டில் இருந்து கோவைக்கு வருவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில், பாலக்காட்டில் இருந்து கோவைக்கு வரும் வழித்தடத்தில் குறிப்பிட்ட தூரம் வனப்பகுதிக்குள் ரயில் தண்டவாளம் வருகிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் வழித்தடத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இந்த யானைகள் உயிரிழந்தது கிடந்தன. தண்டவாளத்தை கடக்கும் போது, மங்களூரிலிருந்து கேரளாவுக்குச் சென்று அங்கிருந்து கோவை வழியாக சென்னை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் மேற்கண்ட யானைகள் உயிரிழந்தது.
அடிக்கடி நடக்கிறது
சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் யானைகளின் சடலத்தை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி, யானைகள் உயிரிழந்தது எப்படி என விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட பகுதியில் யானைகளின் நமாட்டம் அதிகளவில் உள்ளது. இப்பகுதிகளில் ரயில்களை நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வேகத்தில் இயக்க வேண்டும் என, முன்னரே வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அடிக்கடி வேக அளவுகளை மீறி மேற்கண்ட பகுதிகளில் ரயில்களை இயக்குவதால், தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இதேபோல், மூன்று யானைகள் ரயில்மோதி உயிரிழந்தன. தற்போது மீண்டும் மூன்று யானைகள் ரயில்மோதி உயிரிழந்துள்ளன. இதுதொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.