

5 ஜி அலைக்கற்றையால் கரோனா பரவுகிறதா? என்பது குறித்து ஆய்வுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜசேகர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
பல்வேறு நாடுகளில் 5ஜி அலைக்கற்றை பரிசோதனை கடந்த 2019 முதல் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனை நடைபெறாத நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகளவில் இல்லை. இது தொடர்பாக பல்வேறு ஆய்வு கட்டுரைகள் வெளியாகியுள்ளது.
2ஜி, 3ஜி, 4ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வந்த போது சுற்றுச்சூழல் மாறுபாடு ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் 5ஜி அலைகற்றையால் கரோனா பரவல் அதிகரிப்பது தொடர்பா ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பின்னர், மனுதாரரின் ஆய்வு மிகப் பெரியளவில் உள்ளன. இந்த ஆய்வுக்கு ஐசிஎம்ஆர், ஐஐடி அனுமதி வழங்கியுள்ளதா? இது போன்ற ஆய்வுகளில் நீதிபதிகள் நிபுணர்கள் இல்லை. எனவே, மனுதாரர் கோரும் வழிகாட்டுதல்களை நீதிமன்றத்தால் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.