

தொடர் கனமழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் மழை வெள்ள பாதிப்புகளால் பல்வேறு மாவட்டங்களிலும் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன் அறிவிப்பில், "27-ம் தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், புதுவை, காரைக்கால் பகுதியில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
தொடர் கனமழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.