

கரூர் மாவட்டத்தில் ’நிமிர்ந்து நில் துணிந்து சொல்’ பெண் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் மூலம் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 26,085 மாணவிகளிடம் கருத்துக் கேட்பை மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், பாலியல் ரீதியான வன்முறைகள் நடக்காமல் இருப்பதற்காகவும் ’நிமிர்ந்து நில் துணிந்து சொல்’ என்ற திட்டத் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று (நவ. 26-ம் தேதி) நடைபெற்றது.
மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, “நிமிர்ந்து நில் துணிந்து சொல் திட்டம் மூலம் பள்ளி மாணவிகளிடம் பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வு, அதை எவ்வாறு எதிர்கொள்வது, தவிர்ப்பது, போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும் பெண் குழந்தைகளுக்கு ஏற்கெனவே பாலியல் ரீதியான வன்முறைகள் ஏதாவது நடந்துள்ளதா என்பதை மதிப்பீடு செய்வதற்காக கேள்வித்தாள் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும், தனியார் என மாவட்டத்தில் 201 பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் 26,085 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளன.
அவர்களுக்கு ஏதேனும் பாலியல் ரீதியான வன்முறை நிகழ்ந்துள்ளதா? என்றும், ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றனவா? எனவும் மதிப்பிட்டு அதற்குண்டான தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசுத்துறை அலுவலர்களைக் கொண்டு 20 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழுவிற்கு ஒரு நாளைக்கு 5 பள்ளிகள் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் ஏதேனும் பகிர்ந்தால் அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். பாலியல் ரீதியான வன்முறைகள் கண்டறியப்பட்டால் அவர்களின் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.
கல்வி உதவி வழிகாட்டி மையம் 14417, குழந்தைகள் உதவி எண் 1098, மாவட்ட நிர்வாகத்தின் வாட்ஸ் அப் எண் 89033 31098 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.