

கட்சித் தலைமையின் அனுமதியின்றிச் செயல்படக் கூடாது என்று புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி தலைமைச் செயலகத்துக்குச் சென்று தலைமைச் செயலர் அஸ்வினிகுமாரிடம் பல கோரிக்கைகளைப் புதுச்சேரி ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், சுயேச்சை எம்எல்ஏக்கள் பத்துப் பேர் கடந்த 24-ம் தேதி விவாதித்தனர். அதில் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
அதன்பிறகு மழை சேத விவரங்களைக் குறைத்து அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளதாகவும், இந்நிலை தொடர்ந்தால் ஆளுநர் அலுவலகம், தலைமைச் செயலகம் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். தேவையெனில் நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம் இருப்போம் என்று பாஜக எம்எல்ஏக்கள் குறிப்பிட்டனர்.
ஆளும் கூட்டணியிலுள்ள புதுச்சேரி மாநில அரசு மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் புதுவை பாஜக எம்எல்ஏக்களே செயல்பட்டதுடன் காங்கிரஸ் எம்எல்ஏவுடன் இணைந்து செயல்பட்டது சர்ச்சையை உருவாக்கியது.
இது தொடர்பாக புதுவை மாநில பாஜக தலைமை அகில இந்திய கட்சித் தலைமைக்கும், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவுக்கும் தகவல் தெரிவித்தனர். பாஜக எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்கப்படும் என மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர், அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, பாஜக ஆதரவு எம்எல்ஏ சிவசங்கரன் நியமன எம்எல்ஏக்கள் வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக பாஜக தரப்பில் கூறுகையில், "தொடர் மழையால் புதுச்சேரி முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றிய அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புவது தொடர்பாக ஆலோசித்தோம். தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலரைச் சந்தித்தது தொடர்பாக பாஜக எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடாதீர் என்றும், அனுமதியின்றி எதிர்காலங்களில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கட்சித் தலைமை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது" என்று குறிப்பிட்டனர்.