

மின்துறையைத் தனியார் மயமாக்கும் முடிவைத் தற்காலிகமாக ஒத்திவைக்க புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று இரவு இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அது தொடர்பான கோப்புகள் ஒப்புதலுக்காகத் துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக சட்டப்பேரவை வட்டாரங்களில் விசாரித்தபோது, "மின்துறையைத் தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ள சூழலில் மின்துறையைத் தனியார் மயமாக்கும் முடிவு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் இம்முடிவைத் தற்காலிகமாக ஒத்திவைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்தனர்.
புதுச்சேரியில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டங்களை உருவாக்குதல், தனியார் மருத்துவக் கல்லூரியில் 50% இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெறுதல் உள்ளிட்ட விஷயங்கள் கோப்புகளாகத் தயாரித்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் விவரங்கள் விரைவில் ஆளுநர் மாளிகை தெரிவிக்கும்" என்று குறிப்பிடுகின்றனர்.