

திருப்பூர் மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்காததால் விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம், வழக்கம் போல் ஆட்சியர் அலுவலகத்தின் 2-ம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறும். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். ஆனால், இன்று திடீரென வாராந்திர குறைதீர் கூட்ட அரங்கில் நடத்துவதாக அறிவிக்க, விவசாயிகள் போதிய இடமின்றி வெளிநடப்பு செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக அந்த அறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர (வெள்ளிக்கிழமை) குறைதீர் கூட்டத்துக்காக சுமார் 50 பேர் வெளியேற்றப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து வெகுநேரமாகியும், ஆட்சியர் சு.வினீத் பங்கேற்காததால், விவசாயிகள் ஒட்டுமொத்தமாக மனுக்கள் அளித்துவிட்டு, கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தின் முகப்புப் பகுதியில் இன்று பல மணி நேரம் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், “ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். திருப்பூரில் பின்னலாடைத் தொழில் எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல் விவசாயமும் மிகவும் முக்கியமானதாகும். ஆனால், ஒவ்வொரு முறையும் விவசாயிகள் கூட்டத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் காலாவதியகும்படி மாவட்ட நிர்வாகம் செய்கிறது. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைக்கு எந்த விதத்திலும் செவி சாய்ப்பதில்லை.
இந்த நிலையில் பெரிய கூட்டரங்கிலேயே இடப் பற்றாக்குறை ஏற்படும்போது, மிகச்சிறிய அரங்கில், விவசாயிகளை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் தரைத்தளத்துக்கு மாற்றி அவமதித்துள்ளனர். மிகச்சிறிய அறையில் எப்படிக் கூட்டம் நடத்த முடியும். இதுவரை இல்லாத அளவுக்கு, முதல் முறையாக இப்படி நடந்துள்ளது. 10 மணிக்குக் கூட்டம் என்றார்கள். ஆனால், 11.30 மணி ஆகியும் ஒரு அதிகாரியும் வரவில்லை. இப்படி நடத்தினால் எப்படி விவசாயிகள் பிரச்சினை தீரும்’’ என்று கேள்வியெழுப்பினர்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முகப்பில் அமர்ந்தபடி 100க்கும் மேற்பட்டோர் முழக்கங்கள் எழுப்பினர்.
இதையடுத்து வீரபாண்டி போலீஸார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வேளாண் அதிகாரிகளும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் 30-ம் தேதிக்குள் சங்கத் தலைவர்களை அழைத்து, கூட்டம் நடத்த ஆட்சியரிடம் அனுமதி பெறுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.