

மழையால் பாதிக்கப்பட்ட வடசென்னை பகுதிகளுக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.26) வடசென்னையில் புளியந்தோப்பு, திருவிக நகர் போன்ற பகுதிகளில் மழை சேத பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.
மழைநீர் வடிகால் சேகரிப்புப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வடசென்னையில் சுமார் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
முதல்வர் ஆய்வில், அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.