கல்விச் சான்றிதழ்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை விலக்குக: மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கல்விச் சான்றிதழ்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை விலக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரி மாணவர்கள், தங்கள் கட்டணத்துடன் ஒவ்வொரு சேவைக்கும் ஜிஎஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரித்தொகை அரசுக்குச் செலுத்தப்படும். ஒவ்வொரு மாணவரும், பட்டப்படிப்பு முடித்துப் பட்டமளிப்பு சான்றிதழ் பெறுவதற்கு 18 சதவீதம் ஜிஎஎஸ்டி வரியைக் கட்டணத்துடன் கட்டாயம் செலுத்த வேண்டும்;

அசல் சான்றிதழ் இல்லாமல், பட்டச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதியான ‘டூப்ளிகேட்’ சான்றிதழ் பெறவும், ‘மைக்ரேஷன்’ என்ற இடமாற்றுச் சான்றிதழ், பருவத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுவது, சான்றிதழின் உண்மைத் தன்மை சரிபார்ப்புச் சான்றிதழ் ஆகியவற்றுக்கும் 18 சதவீதம் ஜிஎஎஸ்டி செலுத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கடும் நெருக்கடியான சூழலில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சான்றிதழ்கள் மீதான ஜிஎஎஸ்டி வரி விதிப்பு மாணவ சமூகத்திற்குப் பெரும் சுமையாக மாறிவிட வாய்ப்புள்ளது. மாணவர் நலனில் அக்கறை காட்டாமல் வரி வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் மத்திய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பெறும் சான்றிதழுக்காக விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in