கரூர் எம்.பி. ஜோதிமணி ஆட்சியர் அலுவகத்தில் படுத்துறங்கி தொடர் போராட்டம்

ஆட்சியர் அலுவலகத்தில் படுத்துறங்கி எம்.பி. ஜோதிமணி  தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட படம்.
ஆட்சியர் அலுவலகத்தில் படுத்துறங்கி எம்.பி. ஜோதிமணி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட படம்.
Updated on
2 min read

கரூரில் மத்திய அரசின் சமூக நீதித்துறை முகாம் நடத்தப்படாததைக் கண்டித்து எம்.பி. ஜோதிமணி ஆட்சியர் அலுவலகத்தில் படுத்துறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சியருக்கு 3 முறை கடிதம் எழுதியும் ஏற்பாடு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் ஆட்சியரைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தரைத்தளத்திற்கு வந்து எம்.பி. ஜோதிமணியிடம் அவருடன் தரையில் அமர்ந்து விளக்கம் தெரிவித்தார். இருப்பினும் ஆட்சியரின் பதிலால் சமாதானமடையாத எம்.பி. ஜோதிமணி போராட்டத்தைக் கைவிட மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்பதற்காக அரவக்குறிச்சிக்கு மாவட்ட ஆட்சியர் புறப்பட்டுச் சென்றார்.

போராட்டத்தைத் தொடர்ந்த எம்.பி. ஜோதிமணி கூறுகையில், "மத்திய அரசின் சமூக நீதித்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் கரூர் மாவட்டத்தில் முகாம் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளேன். ஒரு மக்களவைத் தொகுதியை அவர்கள் ஒரு யூனிட்டாகக் கருதுகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் முகாம் நடத்தி பயனாளிகளைத் தேர்வு செய்தால் அனைவருக்கும் உபகரணங்கள் வழங்க இயலும். பிற மாவட்டங்களில் வழங்கிவிட்டால் கரூர் மாவட்டம் விடுபட்டுவிடும். எனவே மத்திய அரசு திட்டத்தின் கீழ் முகாம் விவரம் குறித்த கடிதம் வழங்கும் வரை போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தார்.

இதனிடையே, ஜோதிமணிக்கு ஆதரவு தெரிவித்து கரூர் நகரத் தலைவர் பெரியசாமி, மெய்ஞானமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். தனது கோரிக்கையை நிறைவேற்றக் கோரிய ஜோதிமணி, இரவு தனது ஆதரவாளர்களுடன் இரவு உணவருந்தாமலே படுத்து உறங்கி, போராட்டத்தைத் தொடர்ந்தார்.

இன்று 2-வது நாளாக (நவ. 26-ம் தேதி) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்.பி. ஜோதிமணி தனது ஆதரவாளர்களுடன் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கரூரில் இன்று (நவ. 26-ம் தேதி) பங்கேற்றுள்ள அரசு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in