Published : 26 Nov 2021 12:06 PM
Last Updated : 26 Nov 2021 12:06 PM

நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் பொறுப்பேற்பு

உதகை

நீலகிரி மாவட்ட ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக ஜெ.இன்னசென்ட் திவ்யா கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். இந்நிலையில், கடந்த மாதம் தனது மகனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அவர் தன்னையும் தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதன் பின்னர் கடந்த 5ஆம் தேதி மீண்டும் பணியில் சேரவிருந்தார். ஆனால், அவர் பணியில் சேராமல், விடுப்பிலேயே இருந்து வந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவின.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகங்கள் இணை ஆணையராக இருந்த எஸ்.பி. அம்ரித்தை நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இன்று காலை எஸ்.பி.அம்ரித் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அம்ரித் கூறும்போது, "அரசின் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். நீலகிரி மாவட்டம் சூழலியல் முக்கியத்துவமான பகுதி என்பதால் மனிதர்கள் மற்றும் விலங்குகள் வாழ ஏற்ற மாவட்டமாக விளங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x