Published : 26 Nov 2021 03:06 AM
Last Updated : 26 Nov 2021 03:06 AM

மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்கினால் பலன்கள் தவறாக பயன்படுத்தப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

பலன்கள் தவறாக பயன்படுத்தக்கூடும் என்பதால், மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என்பதால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்றிதழ் பெற்ற அவர், தனக்கு கலப்பு மணம் புரிந்து கொண்டதற்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.

அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாட்சியர், மதம்மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்க முடியாது என்றுகூறி, விண்ணப்பத்தை நிராகரித்தார். இதை எதிர்த்து பால்ராஜ் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், ‘‘கடந்த 1997-ம் ஆண்டு அரசாணைப்படி, மதம் மாறிய நபர்களுக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்க முடியாது என்பதால், மனுதாரரின் கோரிக்கையை வட்டாட்சியர் நிராகரித்தது சரியானதுதான்’’ என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘‘மதம் மாறியவருக்கு கலப்பு திருமணசான்று வழங்க உத்தரவிட முடியாது. அவ்வாறு வழங்கினால் பலன்கள் தவறாக பயன்படுத்தக்கூடும். தவிர, மதம் மாறுவதால் ஒருவரது சாதி மாறிவிடுவது இல்லை. ஒரே சாதியையோ அல்லது வகுப்பையோ சேர்ந்த தம்பதியர் கலப்பு திருமண சான்று பெற தகுதியானவர்கள் அல்ல. கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தகுதியானவர்களை மட்டுமே சென்றடைய வேண்டும். ஒருபோதும் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது’’ என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x