

அண்ணாவின் 113-வது பிறந்தநாளையொட்டி, நீண்டகாலம் சிறையில் உள்ள 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிமுறைகளுடன் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையில் கடந்த செப்.13-ம் தேதி பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘அண்ணாவின் 113-வதுபிறந்தநாளை முன்னிட்டு, நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன்விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்’ என்று அறிவித்தார்.
இதையடுத்து, இந்திய அரசியலமைப்பு சட்டம் 161-வது பிரிவின்படி கைதிகளை முன்விடுதலை செய்வதற்கான விதிமுறைகள் வெளியிடப்படுகின்றன. செப்.15-ம்தேதி நிலவரப்படி 10 ஆண்டு சிறைவாசம் முடித்தவர்கள், குறிப்பாக விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர்கள் பின்வரும் கட்டுப்பாடுகளின்கீழ் முன்விடுதலை செய்யப்படலாம்.
குறிப்பாக, சிறைவாசியின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல், முறைகேடு, வழிப்பறி, மோசடி, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றம், சிறையில் இருந்து தப்பித்தல், கள்ளநோட்டு தயாரித்தல், மோசடிசெய்தல், பெண்களுக்கு எதிரானகுற்றம், வரதட்சணை மரணம், பொருளாதார குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், விஷம் கலந்த பொருட்களை விற்பனை செய்தல், வனம் குறித்த தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், ஒருவருக்கு மேற்பட்டவர்களை கொலை செய்து ஆயுள் தண்டனைபெற்றவர்கள், சாதி மற்றும் மதரீதியான வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு முன்விடுதலை அளிக்கக் கூடாது.
மேலும், ஊழல் ஒழிப்புச் சட்டம், சட்டவிரோத கடத்தல் சட்டம், போதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்கள் மற்றும் இதர வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களுக்கும் முன்விடுதலை அளிக்கக் கூடாது. அதேநேரம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 435-வது பிரிவின்கீழ் வராத வழக்குகள் உடையவர்கள், விடுதலை செய்யப்பட்டால் கைதியின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பட்சத்திலும், அவரது குடும்பஉறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையிலும் அவரை விடுதலை செய்யலாம்.
இதுதவிர, 20 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்தவர்களையும் இதே கட்டுப்பாடுகளின் கீழ் முன்விடுதலை செய்யலாம். இருப்பினும், முன்விடுதலை செய்யப்படுபவர்களிடம் இருந்து அதற்கான உறுதிமொழி பத்திரம் பெற வேண்டும். முன்விடுதலை என்பதை ஆயுள் தண்டனை கைதிகள் உரிமையாக கருத முடியாது. இந்தவிதிமுறைகளின் கீழ் வருபவர்களுக்கு மட்டுமே முன்விடுதலை அளிக்கப்பட வேண்டும். இந்த சலுகை நீட்டிக்கப்படக் கூடாது.
அதிகாரிகள் குழுவினர்
முன்விடுதலை அளிக்கப்படுவதை, மாநில அளவில் டிஜிபி அல்லது சிறைத்துறை தலைவர், சிறைத் துறை தலைமையிடத்து டிஐஜி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். அடுத்ததாக, மாவட்ட அளவில்மத்திய சிறையின் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அனுமதி அளிக்கவேண்டும். மண்டல அளவில், மண்டல சிறைத் துறை டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் மாவட்டஅளவிலான குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து பட்டியலை மாநில அளவிலான குழுவுக்கு அனுப்ப வேண்டும். சிறைத் துறை தலைவர் இறுதியாக உரிய விதிகளின்படி ஒவ்வொரு வழக்கிலும் முடிவெடுத்து அரசின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.