

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பயன்படுத்தப்பட்ட கார் உடைக்கப்பட்ட பழைய இரும்பு குடோனில், கேரள தடய அறிவியல் நிபுணர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்சித் என்பவர் கடந்த 14-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாலக்காடு தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து சபீர், சலாம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
சலாம் அளித்த வாக்குமூலத்தின்படி, சித்தூர் தாலுக்கா காம்பரசன்பிள்ளையைச் சேர்ந்த நசீர் என்பவர், கொலைக்குப் பயன்படுத்திய காரை பொள்ளாச்சி குஞ்சிபாளையத்தில் பழைய வாகனங்களை வாங்கி உடைத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் முருகானந்தம் என்பவரிடம் கடந்த 17-ம் தேதி விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் விற்பனையின்போது, வண்டியின் நம்பர் பிளேட் மற்றும் சேசிஸ் நம்பர் இரண்டையும் காரில் வந்தவர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து காரை வாங்கிய முருகானந்தம் கடந்த 22-ம் தேதி அதனை உடைத்து, காரின் இன்ஜின், 5 சக்கரங்கள் மற்றும் சில உதிரிபாகங்களைத் தவிர பிற பொருட்களை விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் கொழிஞ்சாம்பாறை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பிஜு பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர் சசீதரன், ரியாஸ் ஆகியோர் தலைமையில் கேரளா போலீஸார் முருகானந்தத்திடம் 2-வது நாளாக நேற்றும் விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று பாலக்காடு மற்றும் திருச்சூர் பகுதியில் இருந்து வந்திருந்த கைரேகை பிரிவு மற்றும் தடய அறிவியல் துறை உதவியாளர் அனுநாத் தலைமையிலான நிபுணர்கள் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் இன்ஜினின் பயன்பாட்டு நிலை குறித்தும், கார் பாகங்களில் தடயங்கள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.