

உடுமலை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்த இளைஞருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை மடத்துக்குளம் அடுத்த வேடப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து, வீரம்மாள் தம்பதியரின் மகன் கார்த்திக் (21). கூலித் தொழிலாளி. இவர் 2016-ல், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இந்த தகவல் இருவீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில், இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
இதுதொடர்பாக உடுமலை மகளிர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்த, கார்த்திக்கை போலீஸார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மாரிமுத்து மற்றும் வீரம்மாள் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கார்த்திக்குக்கு போக்ஸோ சட்டப்பிரிவின்படி இரட்டை ஆயுள் தண்டனையும், குழந்தை திருமண தடுப்புச் சட்ட பிரிவின்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், சிறுமியின் குடும்பத்தை மிரட்டியதற்காக கொலை மிரட்டல் பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் என மொத்தம் 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி வி.பி.சுகந்தி உத்தரவிட்டார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜமிலா பானு ஆஜரானார். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த வீரம்மாளுக்கு 2 ஆண்டு தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மாரிமுத்துவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.