போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் மாறிய வெங்கச்சேரி தரைப்பாலம்

செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த வெங்கச்சேரி தரைப்பாலம்.
செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த வெங்கச்சேரி தரைப்பாலம்.
Updated on
1 min read

காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரி பகுதியில் செய்யாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறியுள்ளது. வெள்ளம் வடிந்த பிறகு அதை சீரமைக்காமல் போக்குவரத்துக்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாலம் கடந்த 2015-ம்ஆண்டு பெய்த கனமழையின்போது ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்தது. பின்னர் மணல் மூட்டைகள் போடப்பட்டும், பக்கவாட்டில் சவுக்கு மரக் கழிகளைக் கொண்டுகட்டப்பட்டும் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

இந்தச் சாலை வழியாகத்தான் உத்திரமேரூர், திருப்புலிவனம் மற்றும் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். செய்யாற்றில் மீண்டும் தண்ணீர் வந்தால் இந்த பாலம் மேலும் சேதமடையும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கூறி வந்தனர்.

இதனால் இந்தப் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றும், இல்லையேல் பல கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் ‘இந்து தமிழ்' நாளிதழில் இந்தப் பிரச்சினையை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனாலும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இந்தப் பாலத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், தற்போது செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்தப் பாலம் முற்றிலும்சேதமடைந்துள்ளது. இதனால்40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மக்கள் பெருநகர் சென்று சுற்றிக் கொண்டு காஞ்சிபுரம் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பல கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையான காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரி பகுதியில் செய்யாற்றின் குறுக்கே புதிய மேம்பாலத்தை விரைவில் அமைக்க வேண்டும். அதுவரை தற்காலிகமாக இந்தத் தரைப்பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று மக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in