

சுங்குவார்சத்திரம் அருகே 3 இருளர் குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வருகின்றனர். பொது இடத்தில் தங்கி இருந்த அவர்களை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாகவும், உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சுங்குவார்சத்திரம் அருகே இரண்டு வருடமாக 12-க்கும் மேற்பட்ட இருளர் சமுதாய மக்கள் ஆங்காங்கே பொது இடங்களில் டென்ட் அமைத்து தங்கி மரம் வெட்டுதல், மீன்பிடித்தல், விவசாய கூலி வேலைகளை செய்தல் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர்.
கூலி வேலை செய்து பிழைப்பு
கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது விட்டு விட்டுபெய்து வரும் கனமழை காரணமாக சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பாப்பாங்குழி கிராமத்தில் குப்பைகளை சேகரித்து பிரித்தெடுக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டென்ட் கொட்டகையில் 4 குடும்பங்களைச் சேர்ந்த இருளர் சமுதாய மக்கள் தங்கிசமைத்து, சாப்பிட்டு கூலி வேலைகளை செய்து வருகின்றனர்.
பாலகிருஷ்ணன் என்பவர் தனது மனைவி கவிதா மற்றும் 3 மாத கைக் குழந்தையுடன் தங்கியுள்ளார். முருகன் தனது 6 மாத கர்ப்பிணி மனைவியுடன் தங்கி உள்ளார். இவர்களுடன் மேலும் 7 பேர் தங்கியுள்ளனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லையென்றால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இவர்கள் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.