

ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் திண்டுக்கல்லில் தங்கி சமையல் (கேட்டரிங்) வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
தற்போது குழந்தைகளுடன் சுரேஷ் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். செல்வி,பாப்பம் மாள்புரத்தில் உள்ள வீட்டில் தனியாக தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வியின் வீடு நீண்ட நேரமாக பூட்டியே கிடந்தது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி போலீஸார் சென்று பார்த்தபோது, வீட்டின் பூஜை அறையில் செல்வி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
துணை காவல் கண்காணிப்பாளர் தங்ககிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர் சிவக்குமார் அடங்கிய தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.