

திருவண்ணாமலை பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் இயங்கும் தொடக்கப் பள்ளியின் 2-வது தளம் கனமழைக்கு சேத மடைந்துள்ளதால் கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு கட்டுப்பாட்டில், பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் தொடக்க பள்ளி (இரு பாலர் பள்ளி) இயங்குகிறது. ஆனால், இந்தக்கட்டிடத்தில் ஒரு ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் 5 வகுப்புகள் மட்டுமே உள்ளன. இதனால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், சில வகுப்பறை கட்டிடங் கள் சேதமடைந்துள்ளதாக கூறப் படுகிறது.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறும்போது, “தரை தளத்தில்எல்கேஜி, யுகேஜி வகுப்புகள், முதல் தளத்தில் 1, 2, 3-ம் வகுப்புகள்,இரண்டாம் தளத்தில் 4, 5-ம் வகுப்புகள் செயல்பட்டன. கரோனா ஊரடங்கால், கடந்த 13-03-20-ம் தேதியுடன் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு திறக்கவில்லை. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெய்து வரும் மழைக்கு கட்டிடம் சேத மடைந்துள்ளது. 2-வது தளத்தில் உள்ள வகுப்பறையில் மழை நீர் புகுந்துள்ளது. அங்கிருந்த மாணவர்களின் இருக்கைகள், பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. மேற்கூரையின் கான்கிரீட் பெயர்ந்து கிழே விழுந்துள்ளன. மாணவர்களின் நலன் கருதி, 2-வது தளத்தில் உள்ள 4 மற்றும் 5-ம் வகுப்புக்கான அறைகளை ஆசிரியர்கள் பயன் படுத்தவில்லை.
இதற்கிடையில், கடந்த 22-ம் தேதி பள்ளிக்கு 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்தனர். தரை தளத்தில், மழலையர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு வகுப்பறைகளில் ஒரு வகுப்பறையை நகராட்சி நிர்வாகம் எடுத்துக் கொண்டதால், முதல் தளத்தில் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டது. கரோனா தொற்று பரவல் ஏற்படும் நிலை உரு வானது. இதனை சுட்டிக்காட்டி, ஆசிரியர்களிடம் கேள்வி எழுப் பினோம். அதன்பிறகு, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒரு நாளைக்கு ஒரு வகுப்பு மட்டும் நடத்தவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று (நேற்று) 4-ம் வகுப்பு நடத்தப்பட்டது.
இடநெருக்கடி உள்ளதால், தற்காலிக தீர்வாக, பூட்டி வைக்கப்பட்டுள்ள கூட்டரங்கில் வகுப்புகளை நடத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும்.
மேலும், சிமென்ட் காரைகள் பெயர்ந்தும், மழைநீர் புகுந்தும் சேதமடைந்துள்ள 2-வது தளத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்துக் கொடுக்க வேண்டும். 3 தளங்களிலும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். 550 மாணவர்களுக்கு 3 கழிப் பறைகள் உள்ளதால், கூடுதல் கழிப்பறைகளை கட்டிக் கொடுக்க வேண்டும்.
ஸ்மார்ட் வகுப்பறை சுவற் றிலும் மின்சாரம் பரவியதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட் வகுப் பறையை பயன்படுத்த முயன்ற உதவி தலைமை ஆசிரியரை மின்சாரம் தாக்கியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப முடியாது. படிப்பை விட எங்கள் பிள்ளைகளின் உயிர்தான் எங்களுக்கு முக்கியம். மாணவர்களின் நலன் கருதி ஆட்சியர் முருகேஷ் தனி கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.