

திருப்பூரில் வீடு கட்டச் சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டில் இழந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர் பாளையக்காடு ராஜமாதா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). பனியன் தொழிலாளி. இவரது மனைவி மீனா. தம்பதியருக்கு, ஆறு மற்றும் எட்டு வயதில் மகள்கள் உள்ளனர். இவர் திருப்பூரில் வீடு கட்ட, ரூ.5 லட்சத்தைச் சேமித்து வைத்திருந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக, ‘ஆன்லைன் ரம்மி’ விளையாடி வந்தார். அதில், சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை சிறுகச் சிறுக இழந்தார். இதன் காரணமாகக் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் சுரேஷ் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை, மனைவி மீனா பனியன் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார்.
சடலத்தைக் கைப்பற்றிய திருப்பூர் வடக்கு போலீஸார், வீட்டில் கடிதம் ஒன்றைக் கைப்பற்றினர். அதில், ''ஆன்லைன் சீட்டாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டேன். எனக்கு வாழத் தகுதியில்லை. குடும்பத்தினர் என்னை மன்னித்து விடுங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி காரணமாகத் தொடரும் தற்கொலைகள் குறித்து மனநல மருத்துவர் வி.சிவராஜ் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறுகையில், ''ஆன்லைன் ரம்மி, மனதை அடிமையாக்கும். ஸ்டாக்கோம் சிண்ட்ரோம் (Stockholm Syndrome) என்று அதற்கு பெயர். அந்த போதைக்குப் பழகியவர்கள் அதிலிருந்து வெளியேற சிரமப்படுவார்கள். கிட்டத்தட்ட அது ஒருவழிப்பாதைதான். உள்ளே சென்றவர்கள், அதிலிருந்து வெளியே வரப் பாதை இருந்தாலும் வரமாட்டார்கள்.
தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், உழைத்தால் முன்னேறலாம் என்ற பாசிடிவ் மன ஓட்டம் இல்லாதவர்கள், இப்படிச் சிக்குகிறார்கள். பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அது எந்த வழியில் வந்து சேர்கிறது என்பது மிகவும் முக்கியம். எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்பது, இதுபோன்ற பொருளாதாரத்தை இழந்து இறுதியில் ஆபத்தில்தான் முடியும். இன்றைக்கு எவ்வளவு தூரம் அலைபேசியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு அது மனித வாழ்க்கைக்கும், சமூகத்துக்கும் உகந்தது'' என்றார்.
திருப்பூர் மாநகர போலீஸார் கூறுகையில், “தனிப்பட்ட முறையில் அலைபேசி செயலி கொண்டு விளையாடுகிறார்கள். இதனை எப்படித் தடுப்பது என்பது சவாலான விஷயம்தான். ஆனால் அதேசமயம், தனிப்பட்ட முறையில் இதுபோன்ற இணைய சூதாட்டங்களைத் தவிர்ப்பது குடும்பத்துக்கும், அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும்’’ என்றனர்.