பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை; 5 நாட்கள் கழித்து ஆசிரியர் தற்கொலை: எந்தத் தவறும் செய்யவில்லை எனக் கடிதத்தில் உருக்கம்

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை; 5 நாட்கள் கழித்து ஆசிரியர் தற்கொலை: எந்தத் தவறும் செய்யவில்லை எனக் கடிதத்தில் உருக்கம்
Updated on
2 min read

கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மாணவி படித்த பள்ளி ஆசிரியர் 5 நாட்கள் கழித்து திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மாமனார் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மாணவர்கள், ஆசிரியரைத் தவறாக நினைத்ததால் அவமானத்தில் அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. அவர் மீது எந்தத் தவறும், குற்றச்சாட்டும் இல்லை என்றும் கூறப்படுகிறது. அவர் எழுதிய உருக்கமான கடிதமும் சிக்கியது.

கரூர் அருகேயுள்ள புறநகரைச் சேர்ந்த மாணவி, வெண்ணெய்மலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 19-ம் தேதி தனக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாகவும், பெயரைத் தெரிவிக்க பயமாக இருப்பதாகவும், பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி மாணவி தானாக இருக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கமேடு இன்ஸ்பெக்டராக இருந்த கண்ணதாசன் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி கடந்த 20-ம் தேதி அவரைக் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் உத்தரவிட்டார். மேலும், அதனைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஏடிஎஸ்பி கீதாஞ்சலி, முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் ஆகியோர் மாணவி படித்த பள்ளியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மாணவி மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே கடந்த 23-ம் தேதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து மறுநாளான நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே மாணவி படித்த பள்ளி வாகனம் மற்றும் வாகனங்களை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்துத் தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிடாததால் 78 மாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.

கரூர் அரசு கலைக்கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட மாணவ அமைப்புகள் சார்பாக வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளிக்க 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் ஆகியோர் மாணவர்களிடம் மனுவை நேற்று பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாய் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது போலீஸ் விசாரணை சரியாகச் சென்று கொண்டிருக்கிறது. எனவே மாணவர்கள் போராட்டங்களைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில் மாணவி படித்து வந்த தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த கரூர் வடக்கு காமராஜபுரத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் சரவணன் (42) நேற்று பள்ளிக்கு வந்த நிலையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

ஆனால், வாங்கலில் உள்ள அவரது தந்தை வீட்டுக்குச் செல்லாமல், திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள மாமனார் வீடான செங்காட்டுப்பட்டிக்குச் சென்றவர் நேற்று அங்கே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்த கடிதம் சிக்கியுள்ளது.

அக்கடிதத்தில், "என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள். மாணவர்களின் முன் அவமானமாக இருக்கிறது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் மாணவர்களைத் திட்டி இருக்கிறேன். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். நன்றாகப் படியுங்கள்" என எழுதியுள்ளார்.

பாலியல் தொல்லை காரணமாகப் பள்ளி மாணவி கடந்த 19-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் 5 நாட்கள் கழித்து அப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in