Published : 25 Nov 2021 12:06 PM
Last Updated : 25 Nov 2021 12:06 PM

கல்விச் சான்றிதழ்கள் மீதான ஜிஎஸ்டி வரி வசூல் அறிவிப்பைத் தடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

கோப்புப் படம்

சென்னை

கல்விச் சான்றிதழ்கள் மீதான ஜிஎஸ்டி வரி வசூல் அறிவிப்பைத் தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் 19-06-2017 அன்று சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டபோது, அதனைப் பொறுக்குக் குழுவிற்கு அதாவது Select Committee-க்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, திருப்பூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளிடையே காணொலிக் காட்சி வாயிலாகப் பேசியபோது பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்பதற்கு மாற்றுப் பெயர் கொள்ளை வட்டி என்றும் பிரிட்டிஷ் ஆட்சியின்போது விதிக்கப்பட்ட வரியுடன் ஒத்திருப்பதாகவும், 29-11-2020 அன்று தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது அதை அண்ணா பல்கலைக்கழகச் சான்றிதழ்களுக்கான கட்டணத்தின் மீது விதித்திருப்பது, ஏற்கெனவே கல்விக் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சேவைகளுக்குப் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி செலுத்தப்பட வேண்டுமென்றும், 2017-ல் பொருட்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபின், வரிப் பிடித்தம் செய்திருந்தால் அதை தாமதமின்றி அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்றும், வரி பிடிக்கப்பட்டிருந்தால் கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய் அரசுக்கு வரி கிடைத்திருக்கும் என்றும், இந்த வருவாயை இனியும் இழக்காமல் - மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டுமென்றும் தமிழக அரசின் வணிக வரித்துறை கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அறிவிப்பு ஒன்றினை வழங்கியுள்ளதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இதன் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் 500-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளதாகவும், அதில் இடமாற்றுச் சான்றிதழுக்கான கட்டணம், உண்மைத் தன்மை சரிபார்ப்புச் சான்றிதழுக்கான கட்டணம் ஆகியவற்றின் மீது 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரியும், மதிப்பெண் பட்டியல், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல், தற்காலிகப் பட்டச் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணத்தில் 18 விழுக்காடு வரியும், தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறச் செலுத்தும் கட்டணத்தில் 18 விழுக்காடு வரியும், விடைத்தாளின் நகலினைப் பெறுவதற்கான கட்டணத்தில் 18 விழுக்காடு வரியும் வசூலிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும், இதற்கென புதிதாக ஜி.எஸ்.டி. பதிவு எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இதன்படி, ஒரு சான்றிதழுக்கு 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றால், 180 ரூபாயைப் பொருட்கள் மற்றும் சேவைகள் வரியாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் கூடுதலாகச் செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. எண்ணைப் பெற்றதிலிருந்து, அண்ணா பல்கலைக்கழகம் இதனை வசூலிக்கத் தயாராகிவிட்டது என்பது தெளிவாகியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மத்தியில், குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியர் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது.

பொருட்கள் மற்றும் சேவைகள் வரி நடைமுறைக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இதுபோன்றதொரு அறிவிப்பினைத் தமிழக அரசின் வணிக வரித்துறை அனுப்பியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைக்கு சான்றிதழ்களுக்கான கட்டணத்தில் ஆரம்பித்து, பிற்காலத்தில் பிற இனங்களுக்கும் - நீட்டிக்கப்பட்டால், ஏழை, எளிய மாணவர்களுடைய பெற்றோர்களின் கடன் சுமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது.

தமிழக அரசின் வணிகவரித் துறை அறிவிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஆகியவை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென்பதே மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இல்லையெனில், 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பிற்கு ஏற்ப தற்போது மாணவ, மாணவியரிடமிருந்து பல்வேறு சான்றிதழ்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்பதும், வரி என்ற போர்வையில் தற்போதுள்ள கட்டணத்திற்கு மேல் கூடுதலாக கட்டணத்தைக் கல்லூரிகள் வசூலிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதும், இதுகுறித்து வருகின்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முறையிட்டு அதற்கு விதிவிலக்குப் பெற வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு என்பதோடு, கல்விக்கு வரி என்பது எந்த வடிவத்தில் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிய தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, சான்றிதழ்களுக்கான 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தலையில் விழாதவாறு நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x