

விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கிக் கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த சோழகன் குடிக்காடு கிராமத்தில் டிராக்டர் வாங்க தனியார் வங்கியிடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த தவறிய விவசாயியை காவல்துறையினர் தாக்கி குற்றவாளியைப் போல இழுத்துச் சென்ற கொடுமை வீடியோவாக வாட்ஸ்-அப் மூலம் வெளியாகியிருக்கிறது. வாங்கிய கடனை வசூலிக்க எவ்வளவோ வழிமுறைகள் இருக்கும் நிலையில், வங்கியும், காவலர்களும் காட்டுமிராண்டித்தனமான அணுகுமுறையை கையாண்டது கண்டிக்கத்தக்கது.
சோழகன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன் தஞ்சாவூரில் உள்ள தனியார் வங்கியில் டிராக்டர் வாங்குவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டில் வாங்கிய ரூ.3.80 லட்சம் கடனுக்கு வட்டியும் சேர்த்து ரூ.4.39 லட்சம் கட்டியிருக்கிறார். அதன்பிறகும் ரூ.1.34 லட்சம் கட்டும்படி வங்கி நிர்வாகம் பாலனை கட்டாயப்படுத்தி வந்திருக்கிறது. ஆனால், விவசாயம் பாதித்ததால் பாலனால் கடன் தவணையை செலுத்த முடியவில்லை.
இத்தகைய சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் உள்ளூர் காவலர்களுடன் பாலனின் வயலுக்குச் சென்ற வங்கி அதிகாரிகள், பாலனின் டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர். அதற்கு பாலன் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வங்கி அதிகாரிகளும் காவலர்களும் அவரை கடுமையாகத் தாக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரது டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கெல்லாம் மேலாக பாலனை காவல்நிலையத்தில் முட்டி போட வைத்து காவலர்கள் கொடுமைப் படுத்தியதுடன் மரியாதைக் குறைவாகவும் நடத்தியுள்ளனர். இவை எதுவுமே நாகரீக சமுதாயத்தில் நடக்கக்கூடாத கண்ணியக் குறைவான செயல்கள் ஆகும்.
அதிக வட்டிக்கு வாகனக் கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்கள் தான் குண்டர் படையை வைத்துக் கொண்டு கடன் தவணை செலுத்தாதவர்களை தாக்கியும், மிரட்டியும் வாகனங்களை பறிக்கும் செயலில் ஈடுபடும். இப்போது தனியார் துறை வங்கியே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பதும், அதற்கு ஆதரவாக காவல்துறையினரே குண்டர்களைப் போல செயல்பட்டிருப்பதும் கவலையளிக்கிறது.
டிராக்டர் வாங்குவதற்கான கடன் உள்ளிட்ட வேளாண் பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட கடன்களை எவரேனும் திரும்ப செலுத்தவில்லை என்றால் அதை வசூலிப்பதற்காக சில வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல்கட்டமாக வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப செலுத்துமாறு அறிவிக்கை அனுப்ப வேண்டும். அந்த அவகாசத்திற்குள் கடனை திரும்ப செலுத்தாவிட்டால், அது பற்றி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீதிமன்றத்தின் மூலமாகத் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்த கூலிப்படையினரைப் போல காவலர்களை அழைத்துச் சென்று தாக்கியும், மிரட்டியும் கடனை வசூலிக்க முயன்றது மன்னிக்க முடியாத, மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.
இந்தியாவில் பொதுத்துறை நிறுவன வங்கிகள் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1.14 லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளன. அதற்குப் பிறகும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.3,41,641 கோடியாக உள்ளது. இடைப்பட்ட காலத்தில் வாராக்கடன் அளவு இன்னும் அதிகரித்திருக்கலாம். இக்கடன்கள் அனைத்துமே பெரு நிறுவனங்களால் வாங்கப்பட்டு, திரும்பச் செலுத்தப்படாதவை ஆகும்.
பெரு நிறுவனங்களின் விருப்பப்படி இக்கடன்களும் அடுத்த சில மாதங்களில் சத்தமில்லாமல் தள்ளுபடி செய்யப்படும். இப்போது கூட ரூ.9000 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாத விஜய மல்லையா பாதுகாப்பாக வெளிநாடு சென்று தஞ்சமடைந்த பிறகு தான் அவர் தப்பிச் சென்ற விவரமே இந்திய அரசுக்கு தெரியவருகிறது. ஆனால், சாதாரண மக்கள் வாங்கிய விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடனில் கொஞ்சம் பாக்கியிருந்தால் அவர்களின் புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டு அவமானப்படுத்துவார்கள். இது தான் சமத்துவமா?
இந்தியாவுக்கு உணவு படைக்கும் கடவுள்களான விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீளமுடியாத கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் அவர்களுக்கு உதவ வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்.
எனவே, தனியார், பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மற்றொரு புறம், விவசாயி பாலனை காட்டுமிராண்டித் தனமாக தாக்கிய காவலர்கள் மற்றும் அவர்களை வழி நடத்திய வங்கி அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கி, கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். இது குறித்த தேசிய மனித உரிமை ஆணைய விசாரணைக்கும் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.