

நாதஸ்வர இசைக் கலைஞர் மறைந்த பாண்டமங்கலம் எஸ்.ராஜூ நூற்றாண்டு விழா நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலத்தில் நாளை (மார்ச் 6) நடைபெறவுள்ளது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்க லத்தைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர் சண்முக முதலியார் - கனகத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக 6.3.1916-ல் பிறந்தவர் எஸ்.ராஜூ. 7-வது வயது முதலே தனது தந்தை மற்றும் பெரியப்பா நடேச முதலியார் ஆகியோரிடம் நாதஸ்வரம் பயின்றவர். இது தவிர வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், வயலின், ஹார்மோனியம், தவில் ஆகியவற்றையும் கற்றறிந்தார்.
குழிக்கரை தட்சிணாமூர்த்தி, பேரூர் மருதமுத்து, மோகனூர் பிச்சைமுத்து, மருதமுத்து, திரு ஈங்கோய்மலை ராஜரத்தினம் உள்ளிட்ட பல்வேறு பிரபலமான நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் வலங்கைமான் சண்முகசுந்தரம், திருவழுந்தூர் ராமதாஸ், குழிக்கரை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலமான தவில் கலைஞர்கள் இவருடன் இணைந்து கச்சேரிகளில் பங்கேற்றுள்ளனர்.
தனது 16 வயது முதலே பெரிய கச்சேரிகளில் நாதஸ்வரம் வாசித்த இவர், அதில் காட்டும் முழு ஈடுபாடு, தாளம், லயம், சுருதி தப்பாமல் வாசிக்கும் திறன் ஆகியவற்றால் பிரபலமான இசைக் கலைஞர்களால் பாராட்டப்பட்டவர். எந்த ராகத்தை வாசித்தாலும், அந்த ராகத்தின் ஜீவனை வெளிப்படுத்தி, அதில் பல பரிமாணங்களை வெளிக் கொணரும் திறமைமிக்கவர்.
நாதஸ்வரம் வாசிக்கும்போது உடலில் எவ்வித அசைவையும் காட்டாமல், கைவிரல்களின் அசைவு கூட தெரியாமல் நளினத்துடன் வாசிக்கும் பழக்கம் கொண்டவர் ராஜூ. இதன் மூலம் ஏராளமான ரசிகர்களையும் இவர் பெற்றி ருந்தார்.
1948 முதல் 1973-ம் ஆண்டு வரை திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் நாதஸ்வர கலைஞராகப் பணியாற்றி, ஏராள மான நிகழ்ச்சிகளை தந்துள்ளார். ஒருமுறை வாசித்த கீர்த்தனங்களை மறுமுறை கையாளாமல் புதிது புதிதாக கீர்த்தனங்களை வாசித்து வானொலி நேயர்களுக்கு இவர் இசை விருந்து படைத்தார் என்றால் அது மிகையல்ல.
புகளூர் காவிரிப் பாலத் திறப்பு விழாவில் ராஜூவின் வாசிப்பைக் கேட்டு அப்போது கவர்னர் ஜெனர லாக இருந்த ராஜாஜி கைகுலுக்கி பாராட்டியுள்ளார். இதேபோன்று 1957-ல் பரமத்திவேலூரில் நடை பெற்ற திமுக மாநாட்டில் இவரது வாசிப்பை அண்ணா, மு.கருணாநிதி ஆகியோரும் பாராட்டினர்.
திருப்பூர் குமரன் திருப்பூரில் தேசியக் கொடியை ஏற்றிய விழா விலும் ராஜூ நாதஸ்வரம் வாசித் துள்ளார்.
இசை உலகில் சிறப்பான இடத் தைப் பெற்றிருந்த பாண்டமங்கலம் எஸ்.ராஜூ, 11.3.1991-ல் மறைந்தார். இவரது நூற்றாண்டு விழா மார்ச் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழா பாண்டமங்கலத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயில் வளாகத்தில் மார்ச் 6-ம் தேதி மாலை 4 மணிக்கு கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சிவாச்சாரியார் ஆசியுரையுடன் தொடங்குகிறது.
விழாவில், பிரபல கிளாரினெட் இசைக் கலைஞர் திருச்சி ஏ.கே.சி.நடராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார். புலவர் நாக சரஸ்வதி, நல்லாசிரியர் கவிஞர் மணமேடு குருநாதன் மற்றும் இசைக் கலைஞர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.
விழாவையொட்டி பிரபல நாதஸ் வர கலைஞர்கள் ஷேக் மெகபூப் சுபானி, காலீஷாபீ மெகபூப், பெரேஷ்பாபு, தவில் இசைக் கலைஞர்கள் மன்னார்குடி எம்.ஆர்.வாசுதேவன், திருராமேஸ்வரம் டி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோ ரது இசைக் கச்சேரியும் நடை பெற வுள்ளது. விழா ஏற்பாடுகளை ராஜூ குடும்பத்தினர் செல்லையா, ராதாகிருஷ் ணன், பாலகிருஷ்ணன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.