Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

ரூ.659 கோடியில் துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை

மின்துறை சார்பில் ரூ.659 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்கள், 40 திறன் மின் மாற்றிகளின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சீரான மின் விநியோகத்துக்கு கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியம் என்பதைகருத்தில்கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைத்தல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் மின் மாற்றிகள் அமைத்தல், திறன் அதிகரித்தல் போன்ற பணிகளை தமிழக மின் தொடரமைப்பு கழகமும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் செயல்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், திருச்சி - துவாக்குடி, சென்னை - மாம்பலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.357 கோடியே 98 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் 230 கிவோ துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இததவிர, சென்னை- புளியந்தோப்பு, செங்கல்பட்டு- நல்லம்பாக்கம், கள்ளக்குறிச்சி - ஈருடையாம்பட்டு, தூத்துக்குடி சன்னதுபுதுக்குடி, திருவண்ணாமலை- வெம்பாக்கம், திருச்சி - மேட்டுப்பட்டி, வேங்கைமண்டலம் ஆகிய இடங்களில் ரூ.84 கோடியே 76 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் 110 கிவோ திறனில் 7 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செங்கல்பட்டு- வேதாச்சல நகர், காஞ்சிபுரம்- காவனூர், கிருஷ்ணகிரி- மரிக்கம்பட்டி, ராணிப்பேட்டை - அரக்கோணம், சேலம்- பூமனூர், தஞ்சாவூர்- திருநீலக்குடி, திருவள்ளூர்- அடையாளம்பட்டு, திருவண்ணாமலை - அரட்டவாடி, பெரம்பலூர் - கூடலூர் ஆகிய இடங்களில் ரூ.74 கோடியே 62 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் 33 கிவோ திறனில் 10 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.517.39 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திண்டுக்கல், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, தேனி, திருவாரூர், திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 39 துணை மின் நிலையங்களில் 712 எம்விஏ அளவுக்கு திறன் அதிகரிக்க ரூ.141.61 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள 40 திறன் மின் மாற்றிகளின் செயல்பாட்டையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மின்துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் தொடரமைப்புக் கழக மேலாண் இயக்குநர் எஸ்.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x