ஈஷா மையத்துக்கு எதிராக புதிதாக சம்மனை அனுப்பி விசாரிக்க வேண்டும்: குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

ஈஷா மையத்துக்கு எதிராக புதிதாக சம்மனை அனுப்பி விசாரிக்க வேண்டும்: குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு எதிராக, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 2016-ல் தாமாக முன்வந்து வழக்குத் தொடர்ந்தது. இதற்காக அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி ஈஷா சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.தங்களது மையத்துக்கு எதிரான புகாரில் விசாரணைக்கு ஆஜராகும்படி குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதை மதித்து குறிப்பிட்ட தேதியில் அனைத்து விவரங்களுடன் ஆஜரான நிலையில், தங்களை விசாரிக்காமல் ஆணைய அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர். இதில் ஆணையம் ஒருதலைபட்சமான முடிவைத் தீர்மானித்துவிட்டு, விசாரணையை முறையாக நடத்தாததால் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், எனவே அந்த சம்மனை ரத்து செய்யவேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

ஆணையம் தரப்பில், அந்த மையத்தில் குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுவதாக புகார்கள் வந்ததால்தான் சம்மன் அனுப்பப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், "குழந்தைகளின் உரிமைகள் பாதிக்கப்படும்போது, தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்கவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பிவிசாரிக்கவும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது.

அவ்வாறு அனுப்பிவைக்கப்படும் சம்மனை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை அனுமதிக்க முடியாது. அதேநேரம், நேர்மையான, பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெறுவதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

எனவே, ஆஜராக வேண்டிய தேதி, நேரத்தைக் குறிப்பிட்டு, 4 வாரங்களுக்குள் மீண்டும் புதிதாக சம்மனை அனுப்ப வேண்டும். அதற்கு இரு வாரங்களில் ஈஷா யோகா மையம் விளக்கம் அளிக்க வேண்டும். அதற்குப் பிறகு உரிய வாய்ப்புகளை வழங்கி, ஆணையம் 8 வாரங்களில் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in