

தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் நேற்று நடந்த பாஜக செயற்குழுக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மாணிக்கம் (சோழவந்தான்), சோழன் சி.த. பழனிச்சாமி (காரைக்குடி) ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். மாணிக்கம் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏவாக 2016-21 வரை இருந்தார். நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு மாணிக்கம் தோல்விஅடைந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மாணிக்கம் அதிமுகவில் முக்கியப் பொறுப்புகள் இல்லாமல் முழுநேர ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். அந்த அடிப்படையிலே இவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கமானார். 2016-ல் ஓ.பன்னீர்செல்வத்தின் பரிந்துரையில் ‘சீட்’ கிடைத்து வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’ நடத்தியபோது முதல் அதிமுக எம்எல்ஏவாக அவருக்கு ஆதரவளித்து அவரது அணியில் சேர்ந்தார்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி இணைப்புக்குப் பின்பு, அதிமுக வழிகாட்டுதல் குழுவில் மாணிக்கத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் பொறுப்புபெற்றுக் கொடுத்தார். மதுரைமேற்கு மாவட்ட துணைச் செயலராகவும் பதவி வகித்து வந்தார்.
பேரவைத் தேர்தலில் கட்சியினர் இவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காததும் தோல்விக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. இதனால், விரக்தியில் இருந்த மாணிக்கம் கடந்த 6 மாதங்களாக கட்சியில் செயல்பாடு இன்றி இருந்தார். மாநிலப் பொறுப்பில் இருந்தும் மாவட்ட அதிமுகவில் இவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தச் சூழலில்தான் மாணிக்கம், பாஜகவில் சேர்ந்துள்ளார்.
அதுபோல் சிவகங்கை மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான சோழன் சித.பழனிச்சாமியும் நேற்று பாஜகவில் சேர்ந்தார். இவர் தினகரனின் அமமுகவுக்குச் சென்றார். பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் அதிமுகவுக்கு வந்த இவருக்கு கட்சியினர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதால் அவர் பாஜகவுக்கு சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மூலம் பாஜகவில் சேர்ந்துள்ளார்.
பேரவைத் தேர்தலில் கட்சி தலைமை அனைத்து வேட்பாளர்களுக்கும் செலவுக்குப் பணம் வழங்கியது. ஆனால், ஒப்பந்ததாரராகஇருந்ததால் மாணிக்கத்துக்கு மட்டும் பணம் கொடுக்கவில்லை. அதற்கு, முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார்தான் காரணம்என இருவருக்கும் இடையே தேர்தல் சமயத்திலே பிரச்சினை இருந்துவந்தது. இந்த விவகாரத்தைஓ.பன்னீர்செல்வம் கவனத்துக்கு மாணிக்கம் கொண்டு சென்றார்.ஆனால், அவர் மாணிக்கத்துக்கு ஆதரவாகப் பேசவில்லை. தனதுதோல்விக்கு ஆர்பி.உதயகுமாரும், அவரைத் தட்டிக்கேட்காத ஓ.பன்னீர்செல்வமுமே காரணம் என்று கூறிவந்தார். அதனால், ஓ.பன்னீர்செல்வம் மீதும் இவருக்கு அதிருப்தி ஏற்பட்டது.
மேலும், ஆட்சி மாறியதால் ஒப்பந்தப் பணிகள் முன்புபோல் வரவில்லை. இவரது கிரஷரில் இருந்து ஜல்லி எடுத்துச் செல்லும் லாரிகளையும் அதிகாரிகள் மடக்கி அபராதம் விதித்தனர். இந்த நிலையில்தான் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார் என அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கருத்துக் கேட்க மாணிக்கத்தைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.
தென்மாவட்டங்களில், கட்சியில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து இழுக்க பாஜக தரப்பில் காய் நகர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.