மன்னார்குடியில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த மனிதநேய மருத்துவர் சி.அசோக்குமார் காலமானார்

சி.அசோக்குமார்
சி.அசோக்குமார்
Updated on
1 min read

மன்னார்குடியில் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சிகிச்சையளித்து வந்த மனிதநேய மருத்துவர் சி.அசோக்குமார் நேற்று காலமானார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி எம்ஜிஆர் நகரில் வசித்து வந்தவர் மருத்துவர் சி.அசோக்குமார்(72). பொதுநல மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணரான இவர், நேற்று காலை தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது 2 கண்களும் லயன்ஸ் கிளப் மூலம் தானமாக வழங்கப்பட்டன. அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று (நவ.25) காலை 11 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, மன்னார்குடியில் வடசேரி சாலையில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

உயிரிழந்த அசோக்குமாரின் சொந்த ஊர் சென்னை. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த அவர், பின்னர் அப்பணியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, எம்ஜிஆர் நகரில் தனது பெயரிலேயே மருத்துவமனை தொடங்கி நடத்தி வந்தார். தனது மருத்துவமனையில் நோயாளிகளிடம் இருந்து பல ஆண்டுகளாக ரூ.10 மட்டுமே மருத்துவக் கட்டணம் வசூலித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக ரூ.30 பெற்று வந்தார். குறிப்பாக, நரிக்குறவர் இன மக்களுக்கு அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் அவர் இலவசமாக வழங்கினார். மற்ற மருத்துவமனைகளை விட அறுவை சிகிச்சை கட்டணமும் மிகக் குறைவாகவே வாங்கி வந்தார்.

மேலும், லயன்ஸ் சங்கத்தில் இணைந்து, கண் தானம் செய்வதற்கு அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தனது மருத்துவமனை பணியாளர்களுக்கு உரிய பயிற்சியளித்து, மன்னார்குடி பகுதியில் கண்தானம் பெற்றுக்கொடுக்கும் பணியையும் மேற்கொண்டார்.

மன்னார்குடி மக்கள் மத்தியில்‘மனித நேய மருத்துவர்’ என்றுசொன்னாலே அசோக்குமார் என்றுசொல்லும் அளவுக்கு, இங்கு40 ஆண்டுகால மருத்துவ சேவையை வழங்கியுள்ளார். அவரது மருத்துவ சேவையைப் பாராட்டி 20 ஆண்டுகளுக்கு முன்னரே ‘மனிதநேய மருத்துவர்’ என்ற பட்டத்தை மன்னார்குடியில் உள்ள சேவை சங்கங்கள் வழங்கி கவுரவித்துள்ளன.

முக்கிய பிரமுகர்கள் இரங்கல்

இவரது மறைவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், அண்ணா தி.க பொதுச் செயலாளர் வி.திவாகரன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் இந்திய மருத்துவக் கழக நிர்வாகிகள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in