வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானது: திருப்பூரில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கருத்து

திருப்பூர் வித்யாலய பகுதியில் பாஜக மாவட்ட அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த பின்பு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. அருகில், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன், மாநிலப் பொருளாளர்  எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்
திருப்பூர் வித்யாலய பகுதியில் பாஜக மாவட்ட அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த பின்பு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. அருகில், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்
Updated on
2 min read

வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானது என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

திருப்பூர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா திருப்பூர் வித்யாலயம் பகுதியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும், திருநெல்வேலி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்ட அலுவலகங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார்.

கட்சி வளாகத்தை ஒட்டி நடந்த பொதுக்கூட்டத்தில், மாநில துணைதலைவர் சக்கரவர்த்தி வரவேற்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘‘பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றால்மாவட்டந்தோறும் அலுவலகங்கள் அமைய வேண்டும். 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும். வரும் உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி, அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெற இந்த அலுவலக கட்டிடங்கள் நமக்கு பயன்படும்’’ என்றார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:

பாஜகவின் அலுவலகத் திறப்பு மூலம் நாம் நம் இயக்கத்தை வலுவாக்குகிறோம். மற்ற கட்சிகள் அலுவலகங்களை வீட்டில் நடத்துகின்றன. நாம் அலுவலகத்தில் நடத்துகிறோம். குடும்பம் போனால், கட்சி மற்றும் அலுவலகமும் காணாமல் போகும். மோடியின் தொலைநோக்கு பார்வையால் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு இந்த கட்டிடங்களே சாட்சி.

இந்தியாவில் உள்ள 720 மாவட்டங்களில், 473 மாவட்டங்களில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, நாமக்கல் ஆகியவற்றில் இந்த ஆண்டில் கட்சி அலுவலக கட்டிடங்களைத் திறக்க உள்ளோம். பாஜக அலுவலகங்கள் 24 மணி நேரமும் ஆண்டு முழுவதும் செயல்படும்.

கட்சியில் தொண்டர்களை பாஜக முதலிடத்தில் வைத்து உள்ளது. திமுக என்றால் ஊழல் கட்சி. திமுகவும், ஊழலும் நாணயத்தின் 2 பக்கங்கள். குடும்பத்தில் இருப்பவர்களைக் காட்டிலும், திமுகவில் வேறு யாரும் முன்னுக்கு வரமுடியாது. வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானது. ஆனால் பாஜகவில் அப்படி இல்லை. இங்கு மேடையில் இருப்பவர்கள் எவ்வித பின்புலத்திலும் இல்லாதவர்கள்.

ஊழலை திட்டமிட்டு திமுக செய்கிறது. பிரதமர் மோடி, வளர்ச்சியை மட்டும் மனதில் வைத்துள்ளார். விளிம்பு நிலையில் இருப்பவர்களை மோடி முன்னேற்ற நினைக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூரில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு இருந்தது. ஜல்ஜீவன் திட்டம் மூலம், இன்றைக்கு மாறி உள்ளது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. கட்சியின் சித்தாந்தத்தை வலுப்படுத்த, ஊழல் இல்லாத குடும்ப அரசியல் இல்லாத ஒரு ஆட்சியாக இருக்க இந்த அலுவலக கட்டிடங்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்றார்.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக பொறுப்பாளர்கள் சி.டிரவி, சுதாகர் ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in