

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியைச் சேர்ந்தவர் சஞ்சித் (26). ஆர்.எஸ்.எஸ் தொண்டர். இவர், கடந்த 15-ம் தேதி பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியில் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ஆயுதங்களால் சஞ்சித்தை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியது. இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சஞ்சித், அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சித் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பாலக்காடு மாவட்ட போலீஸார் கொலை வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் தொடர்புடைய மூவரை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக மேலும் சிலரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கொலைக்கு பயன்படுத்திய கார் பொள்ளாச்சி பகுதியில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீஸார் நேற்று பொள்ளாச்சிக்கு வந்தனர். பொள்ளாச்சியை அடுத்த குஞ்சிப்பாளையத்தில் உள்ள பழைய வாகனங்களை வாங்கி , அதன் உதிரிபாகங்களை பிரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் முருகானந்தம்(54) என்பவரின் குடோனில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். கார் தொடர்பாக முருகானந்தத்திடம் போலீஸார் விசாரித்தனர்.
அதில், கொலைக்கு பயன்படுத்தி காரை, தான் வழக்கம் போல் வியாபார நோக்கத்துடன் வாங்கியதாகவும், அந்த காரை உடைத்து, அதன் உதிரிபாகங்களை பிரித்து சேலத்தைச் சேர்ந்த சில வியாபாரிகளிடம் விற்பனை செய்ததாகவும் அவர் போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து கேரள போலீஸார், வியாபாரி முருகானந்தத்தை அழைத்துக் கொண்டு சேலத்துக்குச் சென்று வியாபாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.