

மறு திருமணம் செய்த கணவருக்கு எதிராக காலதாமதமாக வழக்கு தொடர்ந்த முதல் மனைவியின் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தஞ்சாவூரைச் சேர்ந்த ஏ.ராஜா சுந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ எனக்கும் சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த டி.சுரேஷ்குமார் என்பவருக்கும் தஞ்சாவூர் சுவாமிமலையில் கடந்த 28.3.2007-ல் திருமணம் நடந்தது. 4.1.2008-ல் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்த 7 மாதம் கழித்து, எனது கணவர் விவாகரத்து கோரி தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், எனது கணவருக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக விவாகரத்து வழங்கப்பட்டது. அந்த வழக்கில் நான் தாக்கல் செய்த மேல்முறை யீட்டு மனு காலதாமதம் எனக்கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே எனது கணவர் 2-வது திருமணம் செய்து அதை பதிவும் செய்துள்ளார். எனவே கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மாலா பிறப்பித்த உத்தரவில், ‘‘எதற்கோ ஆசைப்பட்டு, உள்ளதை தொலைத்த கதையாக’’ பெஞ்சமின் பிராங்க்ளினுடைய பழமொழிதான் இந்த வழக்குக்கு பொருந்தும். கீழ் நீதிமன்றத்தில் கணவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கில், கடந்த 17.6.10-ல் விவா கரத்து வழங்கி தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. அதன்பிறகு 6.4.14-ல் தான் கணவர் மறுதிருமணம் செய் துள்ளார். கிட்டத்தட்ட மூன்றே முக்கால் வருஷத்துக்கு பிறகுதான் கணவர் இந்த முடிவை எடுத்துள் ளார். விவாகரத்து உத்தரவை எதிர்த்து மனைவி தாக்கல் செய்த மனு 5.2.14-ல் தள்ளுபடியாகி யுள்ளது. அதன்பிறகுதான் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். பொதுவாக திருமண உறவு தொடர்பான வழக்குகளில் குழந்தைகளின் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு காலதாமதம் என்பது 24 நாட்கள் வரை கருத்தில் கொள்ளப்படாது. ஆனால் இந்த வழக்கைப் பொருத்த மட்டில், மனைவி காலதாமதமாக கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த இடைப்பட்ட நேரத்தில் கணவர் மறுதிருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் மனைவி வழக்கு தொடர்வது, பின்னர் வேண்டா விருப்பாகவே கணவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இப்போது கணவன், மனைவியைத் தாண்டி மூன்றாவது நபர் ஒருவரின் வாழ்க்கையும் இந்த வழக்கில் அடங்கியுள்ளது. எனவே மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனக்கூறி, கீழ்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.