Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.79-க்கு விற்பனை: வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்ற மக்கள்

சென்னை

சென்னையில் சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.160-க்கு தக்காளி விற்கப்படும் நிலையில், டியூசிஎஸ் பண்ணை பசுமை கடைகளில் நேற்று கிலோ ரூ.79-க்கு விற்கப்பட்டது. பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வழக்கமாக வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பெய்ய வேண்டிய மழையைவிட அதிகமான மழை பெய்துள் ளது. இதன் காரணமாக இந்த 3 மாநிலங்களிலும் தக்காளி உற்பத்தி குறைந்து, அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.110-க்கு விற்கப்படுகிறது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார் போன்ற சில்லறை விற்பனை சந்தைகளில் நேற்று கிலோ ரூ.160 வரை விற்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் இயங்கிவரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம், தினமும் 15 டன் தக்காளியை கொள்முதல் செய்து ரூ.100-க்குள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து சென்னையில் டியூசிஎஸ் கூட்டுறவு சங்கம்சார்பில் நேற்று கிலோ ரூ.79-க்குதக்காளி விற்கப்பட்டது. விலைமலிவாகக் கிடைப்பதால் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் உள்ளிட்ட 6 பண்ணை பசுமை கடைகள் மற்றும் ஒரு நகரும் கடை ஆகியவற்றில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தக்காளியை வாங்கிச் சென்றனர்.

இது தொடர்பாக டியூசிஎஸ் அதிகாரிகள் கூறும்போது, “அரசுஉத்தரவைத் தொடர்ந்து ஓசூர்அடுத்த செட்டிப்பள்ளி, பாகலூர்ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவே 2,875 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் விற்று தீர்ந்தன. தொடர்ந்து கொள்முதல் செய்து மலிவு விலையில் விற்கஇருக்கிறோம். தக்காளி மட்டுமல்லாது மற்ற காய்கறிகளின் விலையும் வெளிச்சந்தையில் உயர்ந்துள்ள நிலையில் மற்றகாய்கறிகளும் சேர்த்து மொத்தம்4,375 கிலோ அளவில் வாங்கி,விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றனர்.

தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “தக்காளியின் விலை உடனே குறைய வாய்ப்புஇல்லாத நிலையில், இத்துறை சார்பில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடும் அளவுக்குதக்காளி நாற்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நடவு பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஒரு மாதத்தில் மகசூல் கிடைக்கத் தொடங்கும்போது விலை கட்டுக்குள் வரும்” என்றனர்.

ஓசூர் அடுத்த செட்டிப்பள்ளி, பாகலூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவே 2,875 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் விற்று தீர்ந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x