

தாம்பரம் மின் கோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்த 99 மின்மாற்றிகள் ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் வெளியான செய்தியால் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
தாம்பரம் மின் கோட்டத்தில் குறைந்த மின் அழுத்தம் மற்றும் அதிக பயன்பாடு போன்ற காரணங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்சினையைப் போக்க தாம்பரம் கோட்டத்தில் 100 கே.வி. திறன்கொண்ட புதிய மின்மாற்றிகள் 99 இடங்களில் ரூ.7 கோடியில் அமைக்கப்பட்டன.
புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகள் நீண்ட காலமாகபயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாததால் குறை மின் அழுத்த பிரச்சினை தொடருவதாகவும், விரைந்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் கடந்த 23-ம் தேதி வெளியானது. இதையடுத்து 99 மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
செம்பாக்கம் நகரில் நடைபெற்ற விழாவில், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா பங்கேற்று ஹனுமன் நகர், விஜிபி சீனிவாசன் நகர், ராஜபாண்டியன் அவின்யூ, ராதே ஷ்யாம் அவின்யூ, ஈஸ்வரிநகர், ஆஞ்சநேயர் தெரு, சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.68 லட்சம் மதிப்பில் 100கே.வி. திறன் கொண்ட 10 மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
மற்ற பகுதிகளில் அதிகாரிகளே மின்மாற்றிகளை மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வந்தனர். செய்தியை வெளியிட்டு பணி உடனடியாக நடைபெற காரணமாக இருந்த ‘இந்து தமிழ்திசை' நாளிதழுக்கு மக்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.