

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆகம முறைப்படி திருப்பணிகளைத் தொடங்கவேண்டும் என வலியுறுத்தி இந்து அமைப்பினர் இன்று போராட்டம் நடத்தினர். இதனால் போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் பெண்களின் சபரிமலை எனப் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் கேரள மாநிலத்தில் இருந்து பெண்கள் அதிக அளவில் இருமுடி கட்டிவந்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இக்கோயில் மூலஸ்தானக் கூரையில் கடந்த ஜூன் 2ம் தேதி தீ விபத்து ஏற்பட்டு சேதமடைந்தது. பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக இரும்பு மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது.
தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ.1.80 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. திருப்பணிகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். இதற்கிடையே கோயிலில் பார்க்கப்பட்ட தேவபிரசன்னத்தின் அடிப்படையில் ஆகம முறைப்படி திருப்பணிகளைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மண்டைக்காடு கோயில் முன்பு இன்று போராட்டம் நடத்த போவதாக இந்து அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இதனால் இன்று காலையில் மண்டைக்காடு கோயில், சந்திப்பு, கூட்டுமங்கலம், படர்நிலம், வெட்டுமடை, பிள்மளையார்கோயில் சந்திப்பு, லட்சுமிபுரம் பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்து, போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபிநவ் தலைமையில் குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் மேற்பார்வையில் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், மற்றும் 600க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மண்டைக்காடு சுற்றுப்புறப் பகுதிகளில் வாகனங்கள், மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகள், பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமம் அடைந்தனர்.
கோயில் பகுதியில் செல்ல முடியாததால் இந்து அமைப்பினர் பருத்திவிளை சந்திப்பில் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிஷா சோமன், மாவட்ட இந்து கோயில்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் ஸ்ரீபதி, ஹைந்தவ சேவா சங்க பொதுசெயலாளர் ரத்தினபாண்டியன், பெரிய சக்கர தீவெட்டி குழுத் தலைவர் முருகன், ஐயப்ப சேவா சமாஜ மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா மற்றும் இந்து அமைப்பினர் திரண்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மண்டைக்காடு கோயில் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸார், இந்து அமைப்பினர் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது. தடையை மீறிப் போராட்டம் நடத்த முயன்ற இந்து அமைப்பினர் 150க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.