Published : 24 Nov 2021 03:23 PM
Last Updated : 24 Nov 2021 03:23 PM

மதுரை விமான நிலையம் அருகே கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை பெருங்குடி பெரிய கண்மாயில் உள்ள கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டை ஆய்வு செய்யும் பேராசிரியர் குழுவினர்.

மதுரை

மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி கண்மாயில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை பெருங்குடி பெரிய கண்மாய் அருகே கல்வெட்டு இருப்பதாக முதுகலை வரலாற்றுத்துறை மாணவர் சூரியபிரகாஷ் தகவல் அளித்தார். அதன்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் து.முனீஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் லட்சுமணமூர்த்தி, ஆதிபெருமாள்சாமி ஆகியோர் கள ஆய்வு செய்தனர். ஆலமரத்து விநாயகர் கோயில் அருகே குத்துக்கால் பாதி புதைந்த நிலையில் கல்வெட்டு இருந்தது. இதனை ஆய்வு செய்ததில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு எனக் கண்டறியப்பட்டது.

இதுகுறித்துப் பேராசிரியர்கள் முனீஸ்வரன், லட்சுமணமூர்த்தி ஆகியோர் கூறும்போது, ’’வேளாண்மை, மண்பாண்டத் தொழிலில் சிறந்து விளங்கிய பெருங்குடியில் பெரிய கண்மாய் ஆலமரத்து விநாயகர் கோயில் எதிரே கல்தூண் உள்ளது. அவை மண்ணில் புதைந்த நிலையில் 5 அடி நீளக் கல் தூணில் எட்டுக்கோணம், 2 பட்டை வடிவத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.

மதுரை பெருங்குடி பெரிய கண்மாயில் உள்ள கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு.

தூணின் மேல் பகுதிப் பட்டையில் 3 பக்கம் நில அளவைக் குறியீடுகள், மற்றொரு பக்கம் திருமாலின் வாமன அவதாரக் குறியீடும் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. நிலத்தை வைணவக் கோயிலுக்கு நிலக்கொடையாகக் கொடுத்ததைச் சுட்டிக் காட்டுகிறது. கல்தூணின் கீழ்பட்டைப் பகுதியில் 12 வரிகள் உள்ள எழுத்தமைதியின் வடிவத்தை வைத்து கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

பல எழுத்துகள் தேய்மானமடைந்ததால் முழுப் பொருள் அறிய முடியவில்லை. தொல்லியலாளர் சொ.சாந்தலிங்கத்தின் உதவியுடன் கல்வெட்டு படிக்கப்பட்டதில், விக்கிரம பாண்டியன் பேரரையான் என்ற சிற்றரசன் இப்பகுதியை ஆட்சி செய்ததாகவும், அப்போது நிலதானம் வழங்கியவரையும், ஆவணமாக எழுதிக்கொடுத்த குமராஜன் என்பவரின் பெயரும் கல்வெட்டு இறுதி வரியில் இருப்பதை அறிய முடிகிறது’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x