

ஓசூரில் தேசிய அளவிலான வளரி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.
ஓசூரில் இந்திய வளரி (பூமராங்) சங்கம் சார்பில் தேசிய அளவிலான வளரி விளையாட்டுப் போட்டிகள் ஓசூர் அதியமான் கல்லூரி மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. தமிழர்களின் வீர விளையாட்டான இந்த வளரி விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உட்பட 16 மாநிலங்களில் இருந்து 15 வயதுக்குட்பட்ட ஜூனியர் பிரிவு மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட சீனியர் பிரிவுகளில் 62 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் துரிதப்பிடி தந்திர வீச்சு மற்றும் பொறுமைப் பிடி தந்திர வீச்சு என ஆறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இரண்டாம் நாள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 16 பேர் வெற்றி பெற்றனர். பரிசளிப்பு நிகழ்வில் ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் பங்கேற்று ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.
போட்டியில் கலந்துகொண்ட அனைத்து வீரர்களுக்கும் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த தேசிய அளவிலான வளரி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச அளவிலான வளரி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இதில் ஓசூர் முன்னாள் எம்எல்ஏ சத்யா, கிருஷ்ணகிரி மாவட்ட சிறுகுறு தொழிற்சாலை சங்கத்தலைவர் ராமலிங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட வளரி விளையாட்டு சங்கத் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன், எலும்பு முறிவு மருத்துவ நிபுணர் பூபேஷ்கார்த்திக், வளரி போட்டி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் கார்த்திக்ராஜா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.