

ஐஏஎஸ் அதிகாரிகள் மழை பாதிப்பை பார்வையிடவில்லை, மக்கள் நலப்பணிகள் முடங்கியுள்ளதாக தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலர் அஸ்வினிகுமாரை சந்தித்து பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் பத்து பேர் கூட்டாக புகார் தெரிவித்தனர். இதில் திமுக பங்கேற்கவில்லை.
புதுவையில் 15 நாட்களுக்கும் மேலாக பெய்த தொடர்மழையால் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். வீடுகள், சாலைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அரசு சார்பில் இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் மழை வெள்ளத்தால் ரூ.20 கோடிக்குள் மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணக்கிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கணக்கெடுப்பையும் மத்தியக் குழுவிடம் அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள், தீபாவளிக்கு அரிசி, சர்க்கரை, மழை நிவாரணம் எதுவும் வழங்கப்படாதது பற்றி மக்கள் தொகுதி எம்எல்ஏக்களிடம் கேள்வி எழுப்பத் தொடங்கியதால் புதுச்சேரி தலைமை செயலாளர் அஸ்வினி குமாரை இன்று ஆளும்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக, மற்றும் காங்கிரஸ்சுயேச்சை, எம்.எல்.ஏக்களான கல்யாணசுந்தரம், நேரு, ஜான்குமார், வைத்தியநாதன், கேஎஸ்பி.ரமேஷ், விவியன் ரிச்சர்டு, பிரகாஷ்குமார், லட்சுமிகாந்தன், ஏகேடி.ஆறுமுகம், பாஸ்கர் ஆகிய 10 பேர் சந்தித்து புகார் தெரிவித்து முறையிட்டனர்.
சந்திப்புக்கு பிறகு சுயேட்சை எம்எல்ஏ நேரு, பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கூட்டாக கூறியதாவது: "புதுவையில் 20 ஐஏஎஸ், அதிகாரிகள் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இருந்தும் மழை வெள்ள பகுதிக்கு நேரில் வந்து பார்வையிடவில்லை. சேத மதிப்புகளை சரியாக கணக்கிடாமல் வெறும் 20 கோடி சேதம் அடைந்ததாக கணக்கெடுத்துள்ளனர். அரசு ரூ.300 கோடி கோரியுள்ள நிலையில், எதுவுமே தெரியாமல் அதிகாரிகள் உட்கார்ந்த இடத்திலேயே பணியாற்றுகின்றனர்.
அரசுத்துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.கோப்பு அனுப்பினாலும் தலைமை செயலர் திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் மக்கள் நலப்பணிகள் அனைத்தும் தொய்வடைந்துள்ளது. அனைத்து துறைகளும் பாதித்துள்ளன. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலரிடம் முறையிட்டு உள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆளுநர் மாளிகை முற்றுகை இடுவோம். நாடாளுமன்றம் முன்பும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர். கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்எல்ஏக்களும் செயல்படுவதாக அவர்கள் தெரிவித்தாலும், இதில் திமுக எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை.