

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:
’’பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறேன்.
'தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது பேசிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்போது 'குதிரை கீழே தள்ளி, குழியும் பறித்த கதையாக' அவர்கள் இனிமேல் விடுதலையாக முடியாத அளவிற்கு புதிய அரசாணையைப் பிறப்பித்திருக்கிறார். இதேபோல தாங்கள்தான் சிறுபான்மையினரின் காவலன் என்று கூறி, அந்த மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக, 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விடுதலையையும் இந்த அரசாணையின் மூலம் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இதுகுறித்து முதல்வர் உரிய விளக்கம் அளிப்பாரா?’’
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.