Published : 24 Nov 2021 11:52 AM
Last Updated : 24 Nov 2021 11:52 AM

சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கயத்தாரில் அனைத்து கட்சி, வியாபாரிகள் மறியல் போராட்டம்

கோவில்பட்டி

கயத்தாறு சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இன்று காலை அனைத்துக் கட்சி மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை - திருநெல்வேலி தேசிய நான்கு வழிச்சாலையில் கயத்தாறு அருகே சாலைப்புதூர் பகுதியில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் தங்களது வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தாமல் சென்று வந்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாஸ்டாக் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கயத்தாறு சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கட்டணம் வசூலிக்கப்படுவதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் கூறி வந்தனர். ஆனாலும் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து கயத்தாறு சுங்கச்சாவடியை அகற்றுவதற்காக ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு சார்பில் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இன்று காலை கயத்தாறு சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், அதுவரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்து சுங்கச்சாவடியை கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் கடந்து செல்லும் போராட்டம் நடத்தப்படும் என ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை கயத்தார் ஊருக்குள் அனைத்து டிப்பர் லாரிகள் மற்றும் பயணிகள் வேன் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

ஒருங்கிணைப்புக் குழுவினர் தலைமையில் வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் கயத்தாறு ஊரில் இருந்து சுங்கச்சாவடியை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். சுமார் 50 மீட்டர் தூரம் வந்த நிலையில் கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் தங்கள் ஊர்வலத்துக்கு வழி விடும்படி ஒருங்கிணைப்பு குழுவினரும், அனைத்து கட்சியினரும் போலீசாரிடம் முறையிட்டனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுக்கவே அவர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து ஏடிஎஸ்பி கோபி தலைமையிலான போலீஸார் அங்கு வந்தனர். மறியலில் ஈடுபட்ட ஒருங்கிணைப்புக்குழு, அனைத்து கட்சியினர் மற்றும் வியாபாரிகளை போலீஸார் கைது செய்தனர். இந்த போராட்டத்தையொட்டி சுங்கச்சாவடி முதல் பேரூராட்சி எல்கை முடிவுவரை நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x