

சிதம்பரம் நீதிமன்றத்தில் ஜெய் பீம் படக்குழுவினர் மீது வன்னியர் சங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. மனுவை ஏற்ற நீதிபதி வரும் 25-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தியதாகக்கூறி தமிழகம் முழுவதும் பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் படக்குழுவினர் மீது காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ( நவ. 23) மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி சார்பில் வழக்கறிஞர் மகேந்திரன் சிதம்பரம் 2ம் எண் மாஜிஸ்திரேட் கோர்டில் ஜெய் பீம் படக்குழுவினர்களான 2டி நிறுவனம்,நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் ஆகியவவை அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் சக்திவேல் வரும் 25ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இது குறித்து மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி கூறுகையில், “ வன்னியர்களின் புனித சின்னமான அக்கி கலசத்தை இப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளனர். படத்தில் உதவி ஆய்வாளர் பெயரை குருமூர்த்தி என்று வைத்துள்ளனர்.
இது குறித்து பல்வேறு காவல்நிலையங்களில் புகார் செய்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நேரடியாகக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். படத்தின் இயக்குனர்பொத்தாம் பொதுவாக மன்னிப்பு கேட்டதை ஏற்றுக் கொள்ளமுடியாது. நடிகர் சூர்யா நேரடியாக வன்னியர் சங்கத்திடமும், பாமகவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அடுத்த கட்டமாக பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.