Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

கொலைவெறித் தாக்குதல் நடத்துவோரிடம் இருந்து உயிரை தற்காத்துக் கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது: காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

கொலைவெறித் தாக்குதல் நடத்துவோரிடம் இருந்து தங்களது உயிரைக் காத்துக்கொள்ள துப்பாக்கியைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது என காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பூமிநாதன், கடந்த 21-ம் தேதி அதிகாலை, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியில் ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காலை நவல்பட்டு அண்ணா நகர் அருகே சோழமாதேவி கிராமத்தில் உள்ள பூமிநாதன் வீட்டுக்குச் சென்று, அவரது படத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பூமிநாதன் மனைவி கவிதா, மகன் குகன் பிரசாத் உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

சட்டப்படி செயல்பட்டுள்ளார்

அதைத் தொடர்ந்து அவர்செய்தியாளர்களிடம் பேசியதாவது: பூமிநாதனுக்கு காவல்துறை வீரவணக்கம் செலுத்துகிறது. சிறந்த பணிக்கான முதல்வர் விருதுபெற்றவர், தீவிரவாதத் தடுப்பு கமாண்டோ பயிற்சி பெற்றவர். அவர், ஆடு திருடிய 3 பேரை 15 கி.மீ தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து, அவர்களிடம் இருந்த அரிவாளையும் பறிமுதல் செய்து பாதுகாப்பாகத்தான் இருந்துள்ளார்.

மேலும், 3 பேரின் உறவினர்களையும் செல்போனில் அழைத்து ஆடு திருடிய தகவலையும் சட்டப்படி அவர்களுக்குத் தெரிவித்துள்ளார். அப்போது, அதில் பிடிபட்ட மணிகண்டன் திடீரென பூமிநாதனை வெட்டிக் கொலை செய்துஉள்ளார். அவருடைய இழப்பு பேரிழப்பு. அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணமும், வாரிசுக்கு வேலையும் வழங்குவதாக அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை சார்பில் நன்றி.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, கொலைவெறித் தாக்குதல் நடத்துவோரிடம் இருந்து தங்களது உயிரைக் காத்துக்கொள்ள போலீஸார் துப்பாக்கியைப் பயன்படுத்த தயங்கக் கூடாது. இதற்காக போலீஸாருக்கு கடந்த 2 மாதங்களாக கைத்துப்பாக்கியைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளித்து வருகிறோம். மேலும், ரோந்து செல்லும்போது கைத்துப்பாக்கி, 6 தோட்டாக்களைக் கொண்டு செல்ல வேண்டும்என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பிடிபட்ட 3 பேரும்தான் இக்கொலையில் ஈடுபட்டனர் என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் மீது குற்றச்சாட்டு கூற எந்த முகாந்திரமும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x