Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

புதுச்சேரி, கடலூர், டெல்டாவில் மத்திய குழு ஆய்வு: மழை பாதிப்பால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் தர விவசாயிகள் கோரிக்கை

புதுச்சேரி, தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். அவர்களிடம் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர் நேற்றும் ஆய்வில் ஈடுபட்டனர்.

புதுவையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை மத்தியக் குழுவினர் நேற்று பார்வையிட்டனர். பாகூர் கிராமப் பகுதியில் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளை மத்தியக் குழுவினர் பார்வையிட வந்தனர். அவர்களுடன் வந்த வேளாண் இயக்குநர் பாலகாந்தியை விவசாயிகள் முற்றுகையிட்டு, “பாதிப்பை ஒருமுறை கூட பார்வையிடாத நிலையில், தற்போது மட்டும் வந்தது ஏன்?’”எனக் கேட்டு திரும்பிச் செல்லுமாறு கூறி கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் அவரைப் பிடித்து தள்ளினர். போலீஸார் அவரை மீட்டனர். தொடர்ந்து மத்தியக் குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பு சேதங்களைமத்தியக் குழு பார்வையிட்டது.

தொடர்ந்து, கடலூர் மாவட்டத்துக்கு வந்த மத்தியக் குழுவினர், பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். பரங்கிப்பேட்டை ஒன்றியம் பூவாலை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

புதுச்சேரி, தமிழகப் பகுதிகளில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் புதுச்சேரியில் ஆய்வை முடித்த பின்னர், பிற்பகலில் காரைக்கால் வந்தனர்.

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் அருகே கீழையூர் தெற்கு பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கட்டப்பிள்ளை மரைக்காயர் தோட்டத்தில் வீடுகள் சேதமடைந்துள்ளதையும் பார்வையிட்டனர். பாதிப்புகள் குறித்து அங்கிருந்த மக்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர், அக்குழுவினர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் புத்தூரில் விவசாயிகளிடம் மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். அப்போது விவசாயிகள் மத்திய குழுவினரிடம், கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரமும், விவசாயிகளின் குடும்பம் ஒன்றுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து, நாகையை அடுத்த பாப்பாக்கோவிலிலிருந்து வடவூர் செல்லும் சாலையில் உள்ள விளைநிலங்களில் கனமழையால் நீரில் மூழ்கி உள்ள சம்பா நெற்பயிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு, விவசாயிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் காவனூர், கோவில்வெண்ணி ஆகிய இடங்களில் விளைநிலங்களில் மூழ்கிய நெற்பயிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் உக்கடை பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகள், பொதுமக்களிடம் பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் கேட்டறிந்தனர்.

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்த புகைப்படங்களையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

முதல்வருடன் இன்று சந்திப்பு

தமிழகத்தில் இரண்டு பிரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ள மத்திய குழுவினர், இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்.

இன்று காலை 10 மணிக்கு மத்திய குழுவினர் ராஜிவ் சர்மா தலைமையில் தலைமைச்செயலகம் வந்து, முதலில் தலைமைச் செயலர் வெ.இறையன்புவை சந்திக்கின்றனர். அதன்பின் 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மழை பாதிப்பு கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கின்றனர்.

அப்போது ஏற்கெனவே கோரப்பட்ட தொகை மற்றும் அதன் பின் மழை பாதிப்பால் ஏற்பட்ட சேதங்கள் என இரண்டுக்கும் சேர்த்து நிவாரணம் வழங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்துவார் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x