Last Updated : 24 Nov, 2021 03:07 AM

 

Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

4 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்கு செல்லும் பழங்குடியின மாணவர்கள்

ஆனைமலை அடுத்துள்ள சேத்துமடையிலிருந்து 4 கி.மீ., தொலைவில் பழைய சர்க்கார்பதி கிராமமும், அடர்ந்த வனப்பகுதியில் மின் உற்பத்தி நிலையம் அருகே புதிய சர்க்கார்பதி பழங்குடியின கிராமமும் அமைந்துள்ளன. பழைய சர்க்கார்பதி கிராமத்தில் பழங்குடியின இனத்தின் மலசர் பிரிவை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகள் கல்வி பயில இப்பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. அதில் 60 மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தர, இரண்டு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.

ஆரம்பப் பள்ளி மாணவர்களை தவிர்த்து, நடுநிலை மற்றும் உயர்நிலை கல்வி படிக்க விரும்பும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சேத்துமடை கிராமத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்கு போதுமான பேருந்து வசதி கிடையாது. சேத்துமடையிலிருந்து புதிய சர்க்கார்பதி கிராமத்துக்கு 34 ஏ என்னும் வழித்தடத்தில் ஓர் அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் பழைய சர்க்கார்பதி கிராமத்துக்குள் வருவதில்லை. பழைய சர்க்கார்பதி பிரிவிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர். அங்கிருந்த சுமார் 4 கி.மீ நடந்து கிராமத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனாலும் படிக்கும் ஆர்வத்தில், மாணவர்கள் நடந்தே செல்கின்றனர். பலர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர். பள்ளி செல்லும் பிள்ளைகள் பத்திரமாக வீடு திரும்பும் வரை, பெற்றோர் அச்சத்துடன்தான் காத்திருக்க வேண்டியதுள்ளது.

இது குறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம் கூறும்போது, ‘‘குழந்தைகளின் எதிர்காலம், தங்களின் வாழ்வை போல காட்டுக்குள் முடங்கி விடக் கூடாது என்பதால் சரக்கு ஆட்டோவில் ஏற்றி பள்ளிக்கு அனுப்புகின்றனர். இதற்காக ஒவ்வொரு வாரமும் ஒரு குழந்தைக்கு ரூ.300 செலவிடுகின்றனர். இப்பகுதியில் இருந்து சுமார் 50 மாணவர்கள் சரக்கு ஆட்டோவில், சேத்துமடை உயர்நிலைப்பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.

சரக்கு வாகனம் மற்றும் லாரிகளில் பொதுமக்கள் பயணம் செய்ய அரசு தடை விதித்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டும் கல்வித்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள், ஆபத்தான முறையில் பயணிக்கும் குழந்தைகளுக்கு பெரியளவில் ஏதாவது பாதிப்பு நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள் போலிருக்கிறது. மாணவர்களின் எதிர்கால கனவுகள் 4.கி.மீ., ஆபத்தான பயணத்தில் முடிவுக்கு வந்துவிடக்கூடாது. பழைய சர்க்கார்பதி, தம்மம்பதி, கல்லாங்குத்து, நாகரூத்து, பொன்னாலம்மன்துறை, மன்னம் மற்றும் மூவேந்தர் காலனி பகுதிகளுக்கு சேத்துமடையிலிருந்து மினி பேருந்து இயக்கவும், புதிய சர்க்கார்பதிக்கு 8 கி.மீ., சாலையை செப்பனிட்டு மீண்டும் காலை முதல் இரவு வரை அரசு பேருந்தை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x