

திருவண்ணாமலை மாவட்டம், வேலப்பாடியைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி முருகன். இவரது மனைவி ஜெயதேவி. இவர்களுக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை யுவதோஷ்குமாருக்கு வயிறு வீங்கி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவம் மற்றும் குழந்தை நல மருத்துவர்கள் பரிசோதித்தபோது, குழந்தையின் சீறுநீரகத்தில் நீர்கட்டி ஏற்பட்டு சிறுநீரகம் பழுதடைந்து அவதியுற்றது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தைக்கு நவீன அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சவுந்திரபாண்டியன் தலைமையில், குழந்தைகள் நல சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் கோபிநாத், பொது நல அறுவை சிகிச்சை நிபுணர் ராஜவேலு, மயக்கவியல் நிபுணர்கள் தீபா, நமச்சிவாயம், பாலபாஸ்கர், ரேவதி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
இதில், யுவதோஷ்குமாருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட நீர்கட்டி மற்றும் அடைப்பு அகற்றப்பட்டது. இதையடுத்து, குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. பிறந்து 50 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சிறப்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை கல்லூரி முதல்வர் உஷா சதாசிவம் பாராட்டினார்.